விழுப்புரம், ஜூன் 26: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமையில் நடந்தது. காலை 11 மணிக்கு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 11 மணியை கடந்தும் அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகளிடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கூட்ட அரங்கிற்கு வந்தார். கூட்டத்தில் ஆட்சியர், அதிகாரிகள் இருக்கைக்கு பின்புறத்தில் வைக்கப்பட்ட பேனர் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
பேனரில் விவசாயி படம், சின்னம் போடாமல் பேனர் வைத்துள்ளீர்கள் என்று கூறி விவசாயிகள் கூச்சலிட்டனர். எப்போதும் பச்சை நிறத்தில் வைக்கப்படும் பேனர், தற்போது தவெக கட்சி கலரான சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடர் சிவப்பு, இளமஞ்சள் கலரில் வைக்கப்பட்ட இந்த பேனரில் முதலமைச்சர் விஜயின் புகைப்படம் மட்டுமே போடப்பட்டிருந்தது.
விவசாயிகள், விவசாயம் சார்ந்த எந்தவொரு படமும் போடாமல் முற்றிலும் தவெக கட்சி கொடி கலரில் பேனர் வைத்து கூட்டம் நடத்தியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) சரவணன் என்பவர்தான், தம்மை தவெக என்று காட்டிக் கொள்ளவே ஆளுங்கட்சியான தவெகவின் கட்சி கொடி கலரில் இந்த பேனரை வைத்ததாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
