×

சப்த மங்கைத் தலங்கள்

பகுதி 1

நமக்குள் இருக்கும் மாபெரும் சக்திகளின் பிரதிபிம்பங்களே கோயில்கள். அப்படி நாம் அறியாது உள்ளே உறங்கும் சக்தியை தூண்டி துலங்கச் செய்வதே கோயில்களின் இடையறாத பணியாகும். ‘‘இதோ இங்கிருக்கும் சக்தியின் முன் வந்தால் போதும். உனக்குள் மொட்டுபோல மூடியிருக்கும் சக்தியொன்று விரிந்து வெளிப்படும். முடங்கிய பிராண சக்தி கட்டவிழும். உடலின் பொலிவு கூடும். மனம் விகசித்து கலையிலும், ஆராய்ச்சியாகவும் பெருகும். அதுவே தீவிர தவமாக ஞானியரிடத்தில் வெளிப்படும். உன்னிடத்தில் ஏதேனும் நல்லபல மாற்றங்கள் உண்டாகும்’’ என்றே ஆதிநாளிலிருந்து மகரிஷிகள் கூறி வந்திருக்கின்றனர்.

ஆதிசக்தியானவள் ஈசனோடு ஈசனாக இருந்தாலும் சிவதரிசனம் பெற்று அதிலேயே ரமித்துக் கிடந்தாலும் புவிக்குள் வந்து தவமியற்றுவதுபோல சுகத்தை அவள் வேறெங்கும் பெறவில்லைதான். ‘‘நான் எத்தனைதான் கயிலையம்பதியிலே கிடந்தாலும் சரி, எம் குழந்தைகள் பரம பக்தர்கள் உலவும் இந்த புவியில் நான் அவர்களோடு பெறும் சிவதரிசனத்திற்கு ஈடுஇணை வேறென்னவாக இருக்க முடியும்” என்று சிவச் சின்னங்களை தரிசிக்கும் பொருட்டு பூமிக்குள் எங்கு தவம் செய்வது என்று நினைத்தபடி இருந்தாள். அம்பிகையின் அவாவை அறிந்த சப்த மாதர்களும், ‘‘தாங்கள் சிவசின்னங்கள் உணர்த்துகின்ற பேருணர்வையும், அந்த சின்னங்களின் தரிசனங்களையும் பெற பூலோகத்தில் ஏழு ஆலயங்கள் உள்ளன. நாங்கள் ஏழு பேரும் அங்குதான் தவமியற்றி அஸ்திரங்கள் பெற்றோம்’’ என்று கூறினர்.

பராசக்தியும் ஏழு தலங்களையும் தரிசித்தாள். அவளைத் தொடர்ந்து பண்டைய காலத்தில் அநவித்யநாத சர்மா எனும் பக்தர் தமது பத்தினியான அனவிக்ஞையுடன் காசி விஸ்வநாதரை வழிபட்டு ராமேஸ்வரம் நகர்ந்து கொண்டிருந்தபோது ஓரிரவு ஒரு தலத்தில் தங்க நேர்ந்தது. காசி விசாலாட்சியே கனவில் தோன்றி ‘‘நீங்கள் இருவரும் இந்த ஏழு தலங்களையும் தரிசித்து விட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று ஆணையிட்டாள். காசி விசாலாட்சியின் வாக்கை ஏற்று அவர்களும் தரிசித்தனர்.

இன்றும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சக்கராப்பள்ளி பெருமான் மற்றும் அம்பாளோடு, அநவித்யநாதசர்மா அனவிக்ஞையுடன் தனிப் பல்லக்கில் எழுந்தருளி மற்ற ஆறு தலங்களுக்கு சென்று வருவதையே சப்த ஸ்தான பல்லக்கு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையைச் சுற்றியே இத்தலங்கள் அமைந்துள்ளன. அவர்கள்தம் அடியொற்றி நாமும் அத்தலங்களை தரிசிப்போமா?

சக்கரப்பள்ளி

முதலில் ஆதிசக்தியானவள் இன்றைய சக்கரப்பள்ளி எனும் தலத்திற்குள் நுழைந்தாள். தலத்தை கண்டதும் அகமலர்ந்தாள். சக்ரவாஹம் எனும் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பறவை ஈசனை வணங்கியது கண்டு மகிழ்ந்தாள். இந்த பறவைதான் துகாராம் போன்ற பாகவத ஞானியர்களை சரீரத்தோடு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக நூல்கள் கூறுகின்றன. ஒரு ஜீவனை இந்த சக்ரவாஹப் பறவை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும்போது ஏற்படும் ஆனந்தத்தை ஆஹா… ஹூ.ஹூ… என்கிற சப்தங்களோடே சாம வேதம் அழகான கானமாக பாடுகிறது.

ஒரு ஜீவனை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பறவையே இத்தலத்தின்கண் ஈசனை பூஜித்து தவமியற்றி தானும் முக்திப்பதம் அடைந்தது. அப்பேற்பட்ட சக்ரவாஹம் எனும் பறவையே இத்தல ஈசனை பூஜித்து தவமியற்றி தன்னை இயக்கும் ஈசனே தன் முக்திப்பதம் சேர்த்துக் கொண்ட அற்புதத்தலமாகும். அதனாலேயே இத்தலத்திற்கு சக்ரவாகேஸ்வரர் எனும் திருப்பெயர் ஏற்பட்டது.
ஆதிசக்தி இத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள்.

நெற்றிக் கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயைக் கலப்பேயில்லாத பூரண ஞானத்தை உணர்ந்தாள். ஈசனே நீக்கமற நிறைந்திருக்கும் மாபெரும் பேருணர்வை தனக்குள்ளும் தானாக நின்றுணர்ந்தாள். அருவமாக அத்தலத்திலேயே தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டாள். மேலும் இத்தலத்தில் சப்த மாதர்களில் ஒருவளான பிராம்மி பூஜிக்கப்பட்ட தலமாகும்.

சப்த மாதர்களும் சண்ட, முண்ட ரக்தபீஜனை சாமுண்டியான காளி வதைப்பதற்கு சகல தேவர்களும் காளியின் அருகே நின்றனர். மகாகாளியான சண்டிகைக்கு வேறொருவர் தயவு தேவையில்லையெனினும் ஒவ்வொரு தேவர்களிடமிருந்தும் ஒவ்வொரு சக்தி வடிவினிலும் ஒவ்வொரு மாதராக சப்த மாதர்களும் வெளிவந்தனர். ஒவ்வொரு தேவனுக்குரிய வடிவம், வண்ணம், வாகனம், ஆயுதம், ஆபரணம் இவற்றினூடே சக்தியும் தோன்றினாள். சண்டிகை குதூகளித்தாள். அப்படித்தான் பிரம்மனிடமிருந்து அவனது சக்தியான பிராம்மணி வெளிப்பட்டாள்.

இங்கு பாருங்கள். இத்தலத்தின் விசேஷமான சக்ரவாஹம் போன்றே பிராம்மணியானவள் ஹம்ஸ எனும் மோட்ச நிலையை குறிக்கும் சொற்றொடரான ஹம்ஸ விமானத்தில் அமர்ந்து வந்தாள். அப்பேற்பட்ட பிராம்மணி கையில் அட்சரமாலையுடனும், கமண்டலத்தோடும் அமர்ந்து இத்தல ஈசனை பூஜித்துச் சென்றாள். அவள் அரக்கர்களை அழிக்கத்தான் ஆயுதங்கள் பெற்றுச் சென்றதாகவும் கூறுவர்.

இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமாகும். மிகப் பழமையான ஆலயமாக இது விளங்குகிறது. கோயிலின் கருங்கற் சுவற்றில் சக்ரவாஹப் பறவை பூஜிப்பது போன்ற சிற்பம் நம்மை நெகிழ்த்துகிறது. ஈசன் சக்ரவாகேஸ்வரர் மூலவராக கருவறையில் பேரருள் புரிகிறார். தியானத்தில் மூழ்கிக் கிடக்கும் ரிஷியின் சாந்நித்தியத்தை அளித்து திகைக்க வைக்கும் சந்நதி அது. மோட்ச ஆனந்தத்தின் கீற்றை இங்கு சர்வ சாதாரணமாக உணரலாம். அம்பாளின் வலது திருவடி பக்தர்களை ரட்சிக்க புறப்படும் பொருட்டு ஒரு அங்குலம் முன்வைத்திருப்பது விசேஷமாகும். பிராகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் மீது ஐந்து தலை நாகம் குடைபிடித்து அதன்மேல் ஆலமரமும், கரங்களில் நாகாபரணமும் பூண்டு அமர்ந்திருப்பது வேறெங்கும் காண முடியாததாகும். நாமும் இந்த சக்கரப்பள்ளி எனும் சக்ரமங்கையை வழிபட்டு அடுத்ததான ஹரிமங்கைக்கு செல்வோமா?

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவிலுள்ள அய்யம்பேட்டை எனும் ஊருக்கு அருகே சக்கராப்பள்ளி எனும் இத்தலம் உள்ளது

அரிமங்கை

வைகுண்டத்திலிருந்து திருமாலை பிரிய நேரிட்ட திருமகள் இனி எப்போதுமே எம்பெருமானை விட்டு அகலக் கூடாது என்று புவியில் பல்வேறு தலங்களில் தவமியற்றினாள். ஹரிக்கு எப்போதுமே நெல்லிக்கனி உகந்தது. அதனால், மகாலட்சுமி அரிநெல்லிக்கனியை மட்டும் உண்டு மானுடப் பெண்ணாக இத்தலத்தின் சத்திய கங்கை தீர்த்தத்தில் ஈசனை நோக்கி பன்னெடுங்காலம் அருந்தவம் புரிந்தாள். சௌகந்திகா எனும் ஆயிரம் இதழ் கொண்ட மலர் மலர்ந்தது. இது திருமாலுக்கு திருமகளின் இருப்பிடத்தை வழிகாட்டியதால், தாமரை இதழ் பாதையே ஸ்ரீ மார்க்கம் ஆயிற்று. ஸ்ரீ – திருமகள், மார்க்கம் – பாதை அதாவது திருமகள் இருக்கும் இடத்திற்கான நல்மார்க்கத்தை காட்டிய ஸ்ரீ மார்க்க நல்லூரே இன்று சிறுமாக்க நல்லூர், செருமாக்க நல்லூர் என்றானது. இவ்வூர் அரிமங்கைக்கு அருகேயே உள்ளது. சிறுமாக்க நல்லூர் வழியாக பாதயாத்திரையாக அரிமங்கைக்கு சென்று வந்தால் எளிதில் திருமகளின் அருள் கிட்டும் என்பர்.

கயிலாயம், ஸ்ரீ வைகுண்டம் போன்ற இரு திவ்ய தேசங்களும் ஒருமித்து முக்தியைத் தந்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்டது இத்தலம். இங்கு ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஹரி முக்தீஸ்வரர் எனும் திருநாமங்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர். ஸ்ரீ தேவிக்கு சம்பூர்ண மகாலட்சுமி என்றும், பூதேவிக்கு சிந்தூர பூமாதேவி என்றும், ஸ்ரீ உதீட்சராஜப் பெருமாள் எனும் திருநாமங்களோடு அருள்பாலிக்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் தனிச் சந்நதிகளில் அருள்வது என்பது தரிசிப்பதற்கு அரிதான விஷயமாகும். தீட்சம் என்றால் பார்த்தல் என்று பொருள். உதீட்சம் என்றால் எப்போதும் இமைப்பொழுதுகூட கண்களை மூடாது நோக்கிய படியே இப்பெருமாள் இருக்கிறார் என்பது பொருள். சதாசர்வ நேரமும் ஈசனும் திருமாலும் கருணையை பொழிந்தபடி இருக்கின்றனர். இவர்களின் மீது அதீத பக்தி கொண்டு வருவோரை புண்டரீக மகரிஷி ஹரிஹர சின்முத்திரை பொறித்து மோட்சப் பாதைக்கு திருப்புகிறார் என்கின்றனர், சித்த புருஷர்கள்.

பார்வதி தேவியானவள் சக்ரமங்கையை வழிபட்டு சப்தமாதர்களின் வழிகாட்டுதல்படி ஹரிமங்கை என்கிற இன்றையை அரிமங்கைக்கு வந்தாள். தலம் தொட்டதும் தமையனாரான விஷ்ணுவின் நினைவும் கூடவே வந்தது. ஆஹா… அண்ணனும் அரனை இங்கு வழிபட்டிருக்கிறாரே என்று மகிழ்ந்தாள். ஹரிமுக்தீஸ்வரர் எனும் சுயம்பு லிங்கத்தினின்று பொங்கும் பேரருளின் முன்பு அமர்ந்தாள். நெஞ்சு நிறைய நிம்மதி பரவ புஷ்பங்களை கொண்டு அர்ச்சித்தாள். விதம்விதமாக ஸ்தோத்திரங்களை கூறியும், இனிய கானங்களை பாடியும் ஆராதித்தாள். நேத்ர தரிசனம் காட்டிய ஈசன் இத்தலத்தில் ஞான கங்கையின் தரிசனத்தை காட்ட கனிவு கொண்டார்.

அம்பிகை தீவிர தவத்தில் எல்லையில்லா பெருஞ்சக்தியான ஈசனோடு கலந்திருந்தபோது திடீரென்று தமக்குள் ஏதோ ஒன்று கொப்பளித்தது. கண்திறந்து பார்க்க உள்ளுக்குள் கொப்பளித்த ஞான கங்கை வெளியேயும் புனித கங்கையாக நீர் வடிவில் நகர்ந்தாள். ஈசன் மாபெரும் ஒளிக்கு மத்தியில் உச்சி சிரசில் கங்கை பொங்க காட்சியளித்தார். இன்றும் இத்தலத்தின் தீர்த்தமாக சத்தியகங்கைத் தீர்த்தம்தான் விளங்குகிறது. நேத்ர தரிசனம் ஞானாக்னி மயமானது. இந்த கங்கையோ தண்ணிலவான தெள்ளிய ஞானம் கொண்டவள். ஆனால், இரண்டும் ஞானத்தைத்தான் தரும். சப்த மாதர்களின் ஒருவளான மாகேஸ்வரி என்பவள் வழிபட்ட தலமிது.

தேவி பாகவதம் கூறும் சண்டிகைக்கு உதவியாக வந்த மாதர்களில் இவள் இரண்டாமவள். கம்பீரமாக காளையின் மீதமர்ந்து வந்தாள். காளை ஈசனுக்கு உரியது. இவளும் மகேஸ்வரனிடமிருந்து உத்பவித்தவள்தான். எனவேதான் மாகேஸ்வரி ஆனாள். கையில் திரிசூலத்தோடும் நாகத்தையே வளையலாக அணிந்தும் திருமுடியில் சந்திரகலை திகழ இத்தல ஈசனை பூஜித்து பலம் பெற்று அரக்கனை அழிக்கச் சென்றாள். ஆதிசக்தியும், மாகேஸ்வரியையும் தொடர்ந்து அநவித்யாசர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்தனர். குளிரக் குளிர ஞான கங்கையில் நனைந்து, ஹரிமுக்தீஸ்வரரை தரிசித்து ஞானாம்பிகையை தரிசித்தபோது சக்ரமங்கையில் பெண்ணின் பருவத்தில் பேதையாக காட்சியளித்தவள் இங்கு பெதும்பை (பள்ளிப் பருவம்) பருவத்தினளாக காட்சியளித்தாள்.

தஞ்சாவூர் – கும்பகோணம் பாதையிலுள்ள அய்யம்பேட்டை கோயிலடிக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. செருமாக்க நல்லூரிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.

சூலமங்கலம்

ஈசனின் ஆயுதங்களும் தனித்துவம் பெற்றவை. அவர் கைகளில் தாங்கியிருக்கும் ஆயுதத்திற்குப்பெயர் அஸ்திர தேவர் என்று பெயர். இவராலேயே ஈசனுக்கு சூலபாணி எனும் திருநாமமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட அஸ்திரதேவர் இத்தலத்தில் உறையும் கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமத்தோடு பொலியும் ஈசனை பூஜித்து தவமியற்றினார். சிவம் தோன்றினார். பக்தியில் சூலம் குழைந்து நின்றது. ஆனாலும், ஈசன் கூர்மையாக பேசத் தொடங்கினார். ‘‘எப்போதும் என் ஆயுதமாக இருக்கும் நீ, பக்தர்கள் கொண்டாடும் திருவிழா காலங்களிலும், தீர்த்தவாரி விழாக்களிலும் எனக்கு முன்பு கம்பீரமாக நீ செல்வாயாக’’ என்று வரத்தையே ஆணையாகவும் இட்டார். அதிலிருந்து சகல சிவாலயங்களிலும் முதலில் அஸ்திர தேவர் எனும் சூல தேவருக்குத்தான் முதல் பூசையும்கூட நடைபெறும்.

இத்தலத்தின் நாயகரான கிருத்திவாகேஸ்வரரும் சிறப்பு வாய்ந்தவராவார். கரிஉரித்த நாயனார் என்றொரு வேறு பெயரும் உண்டு. அதாவது யானையை உரித்து தோலை போர்த்திக் கொள்ளும் பெரும் வதத்தை செய்த விஷயம் அது. அதேபோல கிருத்திவாகேஸ்வரர் என்பதும் ஒரு வதத்தினால் வந்த திருப்பெயர்தான். கயாசுரன் என்பவன் எல்லா இந்திராதி தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லோரும் பயந்து காசிக்கு வந்தனர். கயாசுரனும் காசியை அடைந்தான். அவனைக் கண்டு அஞ்சியவர்கள் விஸ்வநாதப்பெருமானை அணைத்துக் கொண்டனர். அவர்களைப் பிடித்து கொல்லப் பாய்ந்தவன் முன்பு ஈசன் பேரொளி பெருஞ்ஜோதியாகத் தோன்றினார்.

அவனை உதைத்தார். ரத்தம் வழிய கீழே விழுந்தவன் தூக்கி நிறுத்தி யானையை உரித்ததுபோல கயாசுரனின் தோலை உரித்து போர்த்திக் கொண்டார். சகல தேவர்களும் மகிழ்ந்தனர். காசியிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் லிங்கமாக எழுந்தருளினார். அவரைத்தான் கிருத்திவாகேஸ்வரர் என்று எல்லோரும் அழைத்தார்கள். அப்படிப்பட்டவரிடம்தான் இந்த சூல தேவர் இத்தலத்தில் அமர்ந்து பூஜித்து வரம் பெற்றார் என்றால் என்னவொரு பொருத்தம் பாருங்கள். சூலத்திற்கும் வதத்திற்கும் தொடர்பு உண்டல்லவா? அஸ்திர தேவரான சூல தேவரின் சிலையை கோயிலின் உள் வாயிலில் காணலாம்.

ஆதிசக்தியான பார்வதி தேவி சூலமங்கலத்திற்கு வந்தாள். லிங்க ரூபமான கிருத்திவாகேஸ்வர சுவாமியின் திருப்பாதம் படர்ந்தாள். சிவச்சின்னங்கள் உணர்த்தும் அனுபூதிப் பூர்வமான பேருணர்வுகளை பிரபஞ்ச சக்திகளை உணர்ந்தும் தரிசித்தும் தொடர்ந்து வந்தவள் ஈசன் இங்கு எதை தமக்கு அருளப்போகிறாரோ என்று அமர்ந்தாள். தவத்தின் கூர்மையில் தமக்குள் வெகு ஆழத்தில் சென்றாள்.

செங்கதிர் வேந்தன் ஈசன் தோன்றினான். கண்களை கூசும் பேரொளி அங்கு படர்ந்தது. கைகளில் சூலத்தை ஏந்தியவாறு ஈசன் காட்சியளித்தார். ஆணவம், கண்மம், மாயை இவை மூன்றும் விலக்கத்தக்கது. எங்கு இது அதிகமாகிறதோ அதை அடக்கத்தான் இந்த சூலம் என்பதை சொல்லாமல் சொன்னார். முக்குணங்களை உணர்த்தவே இந்த திரிசூலம். சூலம் என்பது முக்குணங்களும் இணைந்ததான ஒரு சக்தி. இவற்றிற்கெல்லாம் அதிபதியே அந்த பரமேஸ்வரர். நான் எனும் அகங்காரத்தை நாசம் செய்பவர்தான் இந்த அஸ்திரதேவர். இது உடலையும் தாண்டி உள்ளுக்குள் ஏற்படும் ஆணவ நாசத்தை உணர்த்தும் விஷயமே இந்த சூல தத்துவமாகும்.

சப்த மாதர்களில் கௌமாரி வழிபட்ட தலமிது. சும்ப நிசும்ப ரக்த பீஜ வதத்திற்கு முன்பு சண்டிகைக்கு துணையாக வந்தவள். கோலமயில் வாகனத்தில் வந்த இவள் குமரப் பெருமானின் சக்தியான கௌமாரியே ஆவாள். வேலவனுக்கே உரிய வேலாயுதத்தையே ஆயுதமாக ஏந்தி வந்து இந்த ஈசனடி பரவி பலம் பெற்று போர்க்களம் நோக்கி ஓடினாள். சூல மங்கையில் வேல் மங்கையான கௌமாரியும் பூஜித்தது எத்துணை ஆச்சரியம்.

அந்த திவ்ய அநவித்யநாத சர்மா நெகிழ்ந்து இத்தலத்தை அடைந்தார். ஆஹா… எப்பேற்பட்ட தெய்வங்கள் தரிசித்த பெருந்தெய்வம் என நெக்குருகி நின்றனர். கீர்த்திவாகேஸ்வரரையும் அம்பாள் அலங்காரவல்லியையும் கண் குளிர தரிசித்தார். அம்பாளை மங்கையாக இங்கு தரிசித்தார்கள். இதை பூப்பருவம் என்பார்கள். ஆதிசக்தியானவள் நானும் உங்களைப்போலத்தான் எமக்குள்ளும் பருவங்கள் உண்டு. அது ஈச நியதி. ஆயினும் அதையும் தாண்டிய நிலையும் உண்டு நம்மிலிருந்து நாதன் நிலை வரை அழைத்துப் போவதற்காகவே இப்படி இந்த தரிசனங்கள்  என்கிறாள்.

கிருத்திகை என்பது ரிஷி பத்தினிகளையும் குறிக்கும் பதம். ரிஷி பத்தினிகளிடம் வாசம் செய்பவர் என்ற பொருளுடனும் இங்கே கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமம் பெற்றுள்ளதாக கூறுவர். பெண்களுக்கு உயர்வைத் தரும் சிவப்பதி இது.

இத்தலத்தில் ஆலமரமின்றி ஜடாமுடியோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். சனி பகவான் தன் குருவான பைரவருடன் அருகருகே நின்று அருள்பாலிப்பது அரிதான தரிசனமாகும். சூல விரதம் என்றே தனியாக ஒன்றுண்டு. இதை சூரியன் மகர ராசியில் இருக்கும்போதும் தை அமாவாசையன்று சிவபெருமானை உள்ளத்தில் வைத்து ஒருபொழுது உணவு உட்கொண்டு சிவாலய தரிசனத்தை முக்காலம் செய்து இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மகாவிஷ்ணு உட்பட பலர் இந்த விரதத்தை மேற்கொண்டதாக பிரமாண்ட புராணம் கூறுகிறது. சூல விரதம் மேற்கொண்டோரை விரோதிகள் நெருங்க முடியாது என்றும் புராணம் பகர்கிறது.

தஞ்சாவூர் – கும்பகோணம் பாதையில் அய்யம்பேட்டையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

நல்லிச்சேரி – நந்திமங்கை

திருவையாறு தலத்தில் ஐயாறப்பர்தான் நந்திதேவருக்கு நந்தி எனும் திருநாமத்தோடு பஞ்சாட்சரத்தையும் ஓதினார். தர்மத்தின் வடிவான நந்தியையே தமது வாகனமாக்கி ஈசன் அதன் மீதேறி அமர்ந்தார். திருமழபாடியில் நந்தி தேவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்படி திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயங்களுமாக மொத்தம் ஏழு தலங்களிலிருந்தும் ஏழு விஷயங்கள் கொணரப்பட்டது. அவையே ஈசனின் சப்த ஸ்தானங்கள் ஆனது.

அதேபோல இந்த நல்லிச்சேரி எனும் தலத்திற்கு நந்தி மங்கையில் பஞ்சாட்சரத்தை ஜபித்து ஈசனை பூஜித்தார். ஈசனின் திருக்கழல் ஸ்பரிசத்தை உணர்ந்த எனக்கு அந்த திருப்பாத தரிசனம் எப்போது கிட்டும் என்று ஏக்கத்தோடு தீவிரமாக பூஜித்து தரிசனம் பெற்றாராம். இவ்வாறு நந்தி திருக்கழல் தரிசனம் பெற்ற தலம் இதுவேயாகும். நந்தி தேவர் வழிபட்டதற்கான புடைப்புச் சிற்பத்தை ஆலயத்தில் காணலாம். சூல தரிசனம் பெற்ற ஆதிசக்திதாயானவள் இத்தலம் நோக்கி வீறு நடைபோட்டு வந்தாள்.

திருவானைக்கா போல ஈசனுக்கு இத்தலத்தில் ஜம்புநாத சுவாமியாகும். அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி எனும் அழகிய நாமம். லிங்க வடிவில் வீற்றிருந்த ஈசனின் முன்பு அமர்ந்தாள். அடிமுடி காண முடியாத ஈசனின் திருவடியை தேடினாள். அது எல்லை காணாத விஷயம் என்பதை அறிந்தவள் தம் இருதயக் குகையில் சிக்கெனப் பிடித்தாள். எப்போதும் கால் தூக்கி நடனமிட்டபடியிருக்கும் சிவனாரின் தாண்டவத்தையும் உலக இயக்கமே இந்த தாண்டவச் சுழற்சிதான் என்பதையும் தெளிவாகப் பார்த்தாள். திருப்பாதத்தின் மேலுள்ள அந்தக் கழலையும் கண்டாள். அன்று இத்தலத்தில் நந்தி தேவருக்கு திருக்கழல் காட்டியவன் இன்று அம்பிகைக்கும் அதே தரிசனத்தை காட்டியருளினார்.

இங்கு சென்றால் இன்ன தரிசனம் கிட்டும் எப்படி என்று அறிந்து வந்திருக்கிறாள்? பிரபஞ்சத்தின் வட்டச் சுழற்சியை உணர்த்தும் கழலின் அழகை கண்டு தன்னை மறந்தாள். தன்னில் ஓர் அம்சத்தை அங்கேயே அழகாக நிலைநிறுத்தி அலங்காரவல்லியானாள். பின்னாளில் எவரேனும் தன்னையும் சேர்ந்தே தரிசிப்பார்கள் என்றே.

சப்த மாதர்களில் வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. தேவி மகாத்மியத்தில் சண்டிகைக்கு உடனாக நின்றவள். கருடன் மீதேறி, சங்கமும் சக்ரமும் கதையும் சார்ங்கம் எனும் வில்லும், நந்தகீ எனும் வாளும் ஏந்தி வந்த விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட நீல நிற நாயகி இவள்.

ஜம்புகேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றாள். வலிமையும் உற்றாள். அநவித்யநாத சர்மா தமது பத்தினியோடு இத்தலத்திற்கு வந்து ஜம்புகேஸ்வரரையும், அலங்காரவல்லியையும் தரிசித்தார். அம்பாள் மடந்தை எனும் கன்னியாக காட்சியளித்தார். இங்கே என்னவொரு அற்புதமான ஒப்புமை பாருங்கள்.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி எப்படி கன்னிகையோ அதுபோல இங்கேயும் அகிலாண்டேஸ்வரி என்கிற அதே நாமத்தோடு கன்னிகையாகவே அருள்கிறாள். அதே தரிசனத்தைத்தான் அநவித்யநாத சர்மாவும் பெற்றிருக்கிறார். இத்தலத்தில் காசியைப்போல் அருகேயே மயானமும் அதை நோக்கிய சிவ சந்நதியும் இருக்கிறது. சூரிய பூஜை நடைபெறும் தலம். வெள்ளெருக்கு இத்தலத்தின்
தலவிருட்சமாக உள்ளது.

தஞ்சாவூர் – கும்பகோணம் பாதையில் தஞ்சையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மெயின்ரோடிலேயே இக்கோயிலுக்குச் செல்வதற்கான வளைவு உண்டு. அதிலிருந்து 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலை அடையலாம்.

(தொடரும்)

Tags : Sabta Mangai ,
× RELATED கொரநாட்டுக் கருப்பூர் – பெட்டி காளியம்மன்