*மறியலால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கடையம் : கடையம் வட்டார குவாரிகள், கிரஷர்களில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரத்துடன் செல்லும் கனரக லாரிகள் விதிமீறி சென்றதால் பொட்டல்புதூரில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியலில ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் இயங்கும் குவாரிகள், கிரஷர்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக லாரிகள் கனிம வளங்களை ஏற்றி கேரளாவுக்கு சென்று வருகின்றன.
இந்த லாரிகள் அரசு விதித்துள்ள எடை வரம்பை மீறி அதிக பாரத்துடன் செல்வதோடு, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இரவு நேரங்களிலும் இயக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் லாரிகளால் சாலைகளும் குண்டும் குழியமாக மாறி இரு சக்கர வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் பொட்டல்புதூர் பகுதியில் வந்த கனரக லாரிகளை உள்ளூர் மக்களும் அரசியல் கட்சியினரும் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு ஆழ்வார்குறிச்சி இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை அப்புறப்
wபடுத்த முயன்றனர்.
ஆனால், கனிமவள லாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரவு 12 மணி வரை லாரிகள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன. இதையறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, “நாளை முதல் லாரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே இயக்கப்படும்” என உறுதியளித்தார். இதையடுத்து விதிகளை மீறிய லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் பொட்டல்புதூர் பகுதி சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பாக காணப்பட்டது.இப்பகுதியில் தொடர்ந்து கனரக லாரிகள் விதிமீறல் நடைபெறுவதால், உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் உரிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
