×

கருங்கலில் பட்டப்பகலில் கடையில் இருந்த பெண்ணிடம் 5.5 பவுன் நகை பறிப்பு

*பைக்கில் வந்த வாலிபர்கள் கைவரிசை

கருங்கல் : கருங்கல் அருகே இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் தனது வீட்டையொட்டி டீ மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார். ஐயப்பன் நேற்று மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றார். அவரது மனைவி ராஜம்(65) கடையில் இருந்தார்.

அப்போது பைக்கில் இரண்டு வாலிபர்கள் கடைக்கு வந்தனர். அதில் பைக்கை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் இருந்த நபர் பைக்கில் இருந்து இறங்கி, ராஜத்திடம் 2 சிகரெட் வாங்கினார்.

அதற்கு ரூ. 50 கொடுத்துள்ளார். அதனை ராஜம் வாங்கிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் நகையை அந்த வாலிபர் பறித்தார். அதிர்சியடைந்த ராஜம் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

அதற்குள் அவர்கள் பைக்கில் கருங்கலில் இருந்து மிடாலம் செல்லும் ரோட்டில் பைக்கில் மின்னல் வேகத்தில் புறப்பட்டனர். செல்லும் வழியில் நடந்து வந்த ஒரு பெண்ணை மோதி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் அந்த பெண்ணுக்கு கை ஒடிந்தது. அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி கருங்கல் காவல் நிலையத்தில் ராஜம் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Karangal ,Aiyappan ,Indranagar Colony ,Ayyappan ,Rajam ,
× RELATED பல மாநிலங்களில் கைவரிசை: கள்ளக்காதல் ஜோடி கைது