×

திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களை ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைக்க அரசு முன்வருமா..? காவலர்கள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர்: செங்கல்பட்டு மாவட்டமாக இருந்து 1.1.1997ல் திருவள்ளூர் மாவட்டம் உதயமானது. திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்து, 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டமாக இருந்தபோது, அப்போதிருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்கள் தொடங்கி செயல்பட்டு வந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய 4 காவல் சரகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் தற்போது 22 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் சரகத்தில் திருவள்ளூர் டவுன், திருவள்ளூர் தாலுகா, கடம்பத்தூர், மணவாளநகர், மப்பேடு மற்றும் புல்லரம்பாக்கம் ஆகிய 6 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

ஊத்துக்கோட்டை சரகத்தில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பென்னாலூர் பேட்டை, வெங்கல் ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளன. திருத்தணி சரகத்தில் திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 6 காவல் நிலையங்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டி சரகத்தில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, பாதிரிவேடு ஆகிய 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 22 காவல் நிலையங்கள் உள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் திறக்கப்பட்டதால், திருவள்ளூர் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, மீஞ்சூர், சோழவரம், காட்டூர் ஆகிய 5 காவல் நிலையங்கள், ஆவடி காவல் ஆணையர் கட்டுப்பாட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 22 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர், திருத்தணி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி ஆகிய 4 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 29 ஆண்டுகளுக்கு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப 40 முதல் 50 கிராமங்கள் வரை உள்ள மக்களின் பாதுகாப்புக்காக காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஒருவரும், சப்-இன்ஸ்பெக்டர்கள் 3 பேரும், தலைமை காவலர், உதவி தலைமை காவலர், எழுத்தர், உதவி எழுத்தர், காவலர்கள், நீதிமன்றத்திற்கு செல்லும் காவலர்கள் அதேபோல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர், கடை நிலை காவலர் என ஒரு காவல் நிலையத்தில் குறைந்தது 40 முதல் 50 பேர் பணியில் இருந்தால் மட்டுமே, அந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்படும் நிலை இருந்தது.

தற்போது, மக்கள் தொகை அதிகமாவதுடன் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்களும், உயிர் இழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு குற்றச் சம்பவங்களும் அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் 10 முதல் 20 கி.மீட்டர் தூரம் வரை உள்ள கிராமங்களுக்கு காவல் துறையினர் எளிதில் சென்று வர முடிந்தது. ஆனால், தற்போது மக்கள் தொகை பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக குற்ற நிகழ்வுகள் நடைபெறும் பகுதிக்கு காவல் துறையினர் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வளர்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. குடியிருப்புகளும் அதிகமாகி, கடைகள், தொழிற்சாலை நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும்போது, காவல் துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.

திருவள்ளூர் காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 22 காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் இன்ஸ்பெக்டர் முதல் கடைநிலை காவலர் வரை 1500 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 1000க்கும் குறைவான போலீசாரே தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட தலைநகரை ஒட்டியுள்ள வளர்ந்து வரும் பகுதிகளான தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள், வடமாநில தொழிலாளர்கள் அதிகமுள்ள காக்களூர், சுற்றுலாத் தலமாக விளங்கும் பூண்டி மற்றும் திருவள்ளூர் நகரை ஒட்டியுள்ள ஈக்காடு, அரண்வாயல் போன்ற பகுதிகளில் குடியிருப்புவாசிகள் அதிகளவில் இருக்கின்றனர். இதனால், மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் நடைபெறும் திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுத்திடவும், குறைத்திடவும் அங்கு புதிய காவல் நிலையம் ஏற்படுத்திட வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேபோல், திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள 22 காவல் நிலையங்களில் பெரும்பாலான காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பதவி காலியாகவே உள்ளது. இரண்டு காவல் நிலையங்களை ஒரே இன்ஸ்பெக்டர் கவனித்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தையும், பள்ளிப்பட்டு இன்ஸ்பெக்டர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தையும் சேர்த்தே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்படுவதால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 40 பேர் வரை இருக்க வேண்டியதற்கு பதிலாக 10, 15 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் அவர்களே நீதிமன்ற வழக்கிற்காக செல்வது, பந்தோபஸ்து செல்வது, இரவு ரோந்து பணி செல்வது என தொடர் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக வேண்டி உள்ளது. அதுமட்டுமல்லாமல் 8 மணி நேர வேலை என்ற நிலை இருந்தாலும், போதிய காவலர்கள் இல்லாததால் தொடர்ந்து பணி செய்ய வேண்டிய நிலையும் இருக்கிறது.

ஆவடி காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் அங்கு பணியிட மாற்றம் செய்துக்கொண்டு செல்கின்றனர். ஏனெனில், அங்கு சரியாக 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்ற நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் உணவுப்படி ரூ.8 ஆயிரம் சம்பளத்துடன் சேர்த்து வருவதால் காவலர்கள் அங்கு பணிபுரியவே ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், அங்கு இடம் மாறுதல் பெற்று சென்றும் விடுகின்றனர். இதனால் பணி நேரம் முடிந்த பிறகு உடனடியாக கிளம்பி வீட்டிற்கு செல்ல முடிகிறது என்றும் மாற்றலாகி சென்ற காவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் குறைந்த அளவே தற்போது பணி செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் சரியான விகிதத்தில் காவலர்கள் பணியில் இருப்பதால், குற்றங்கள் பெருமளவு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடைபெறும் ஒரு சில குற்றங்களும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தீர்வும் காணப்பட்டு வருகிறது. சென்னையை ஒட்டிய மாவட்டமாக இருக்கும் திருவள்ளூர் மாவட்டம் தொடர்ந்து வளர்ந்து வரும் மாவட்டமாகவும் உள்ளது. இதனால் குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் அதிகரித்து வருவதாலும் ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுவதாலும், வடமாநில தொழிலாளர்களும் அதிகளவில் குவிந்து வருவதாலும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களோடு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள 22 காவல் நிலையங்களையும் இணைக்க வேண்டும் என்றும், இதனால் கூடுதலாக முறைப்படி காவலர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவதோடு சரியாக 8 மணி நேரம் வேலை பார்க்கவும் ஏதுவாக இருக்கும் என்றும், குற்றங்கள் குறையவும், நடைபெறும் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருக்கும் என்றும் காவலர்கள் ஏக்கத்துடன் தெரிவிக்கின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றங்கள் குறையவும், அரசு சட்ட விதிப்படி 8 மணி நேர பணி செய்ய விரும்பும் காவலர்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு? என காவலர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Thiruvallur district ,Avadi Police Commissionerate ,Thiruvallur ,Chengalpattu district ,
× RELATED திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி...