×

6 உலக கோப்பை தொடரில் கோல் போட்ட முதல் வீரர்! ரொனால்டோ வரலாற்று சாதனை; விமர்சனங்களுக்கு பதிலடி

ஹூஸ்டன்: போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 6 உலக கோப்பை தொடர்களில் கோல் போட்ட முதல் வீரராக வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்து தன் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரின் கே பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் காங்கோ அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது) ஒரு கோல் கூட போடாதது அந்நாட்டு ரசிகர்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியது. அவர் எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும், அணியில் சேர்த்திருக்கவே கூடாது. உலக கோப்பை போன்ற மிகப் பெரியத் தொடரில் விளையாடும் அளவுக்கான தகுதி இனிமேலும் அவரிடம் இல்லை… என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சித்தனர்.

இந்த நிலையில், போர்ச்சுகல் அணி 2வது லீக் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் ரொனால்டோவை பெஞ்ச்சில் உட்கார வைக்க பயிற்சியாளர் முடிவு செய்துவிட்டார் என்றெல்லாம் கூட வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. ஆனால், ஹூஸ்டனில் நடந்த போட்டியில் ரொனால்டோவே போர்ச்சுகல் அணிக்கு தலைமையேற்றதுடன், தாக்குதலை முன்னின்று நடத்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.

6வது நிமிடத்திலேயே அவர் அடித்த அபாரமான கோல், 6 வெவ்வேறு உலக கோப்பை தொடரில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ வசமாக்கியது. இதைத் தொடர்ந்து 17வது நிமிடத்தில் நுனோ மெண்டிஸ், 39வது நிமிடத்தில் மீண்டும் ரொனால்டோ கோல் போட போர்ச்சுகல் அணி இடைவேளையின்போது 3-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த போர்ச்சுகல் வீரர்கள், உஸ்பெகிஸ்தான் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

அதை சமாளிக்க முடியாமல் திணறிய உஸ்பெகிஸ்தான் அணிக்கு அப்துவோகித் நெமடோவ் 60வது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தது மேலும் பின்னடைவை கொடுத்தது. கடைசி கட்டத்தில் ரபேல் லியோ (87வது நிமிடம்) பந்தை வலைக்குள் திணிக்க, போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று 3 புள்ளிகள் பெற்றது. 2 கோல் போட்டு அசத்திய ரொனால்டோ ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். நடப்பு தொடரில் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஜொலித்து வரும் நிலையில், இதோ… நானும் களத்தில் இருக்கிறேன் என்று சவால் விடுத்திருக்கிறார் ரொனால்டோ.

* போர்ச்சுகலின் முதல்வன்
* 6 உலக கோப்பையில் கோல் அடித்து அர்ஜென்டினாவின் மெஸ்ஸியை முந்திய ரொனால்டோ, உலக கோப்பையில் அதிக கோல் அடித்த போர்ச்சுகல் வீரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார்.
* உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக முதல் கோல் போட்தும் யூசெபியோ (9 கோல்) சாதனையை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்து கொண்ட ரொனால்டோ, 2வது கோல் அடித்து போர்ச்சுகல் நம்பர் 1 ஆக முத்திரை பதித்துள்ளார்.
* உலக கோப்பையில் கோல் போட்ட மிக மூத்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ 2வது இடம் பிடித்துள்ளார் (41 வயது, 138 நாள்). ரஷ்யாவில் 1994ல் நடந்த உலக கோப்பையில் கேமரூன் வீரர் ரோஜர் மில்லா 42 வயது, 39 நாளில் கோல் போட்டு முதலிடம் வகிக்கிறார்.

* அணிதான் முக்கியம்…
உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ரொனால்டோ கூறியதாவது: இது மிகக் கடினமான இருண்ட வாரமாக இருந்தது. கால்பந்து விளையாட்டில் இருந்து நான் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டதைப் போன்றே உணர்ந்தேன். ஆனால், எப்போதும் போலவே நம்பிக்கையுடன் இருந்தேன். ஏனெனில், மற்ற எதையும் விட என் திறமையை மட்டுமே நம்புபவன் நான். சக வீரர்கள் எனக்கு உதவுவார்கள் என எனக்குத் தெரியும். இதோ கடினமான நிலையில் இருந்து மீண்டுவிட்டோம். சாதனைகளை முறியடிப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும். அதை விட தேசிய அணியின் வெற்றிக்கு உதவுவதே முக்கியம்’ என்றார்.

* குரோஷியா வெற்றி
கனடாவின் டொரான்டோ நகரில் நடந்த எல் பிரிவு லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தியது. குரோஷியா சார்பில் புதிமிர் 54வது நிமிடத்தில் கோல் போட்டார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. எல் பிரிவில் 4 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் கானா தலா 4 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன. குரோஷியா (3 புள்ளி) மூன்றாவது இடத்தில் இருந்தாலும் நாக் அவுட் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. பனாமா தொடர்ச்சியாக 2வது தோல்வியுடன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது.

* காங்கோவை வீழ்த்தியது கொலம்பியா
உலக கோப்பை கே பிரிவில் காங்கோ அணிக்கு எதிராக கொலம்பியா வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகள் பெற்றுள்ளதால், போர்ச்சுகலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. குவாதலஜாரா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் மிகச் சிறப்பாக்க செயல்பட்டதால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 0-0 என சமநிலை வகித்தன. இடைவேளைக்குப் பிறகும் இதே நிலை நீடித்தது.

76வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் அபாரமாகக் கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து கே பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியதுடன் நாக் அவுட் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது.இதனால், மயாமியில் 28ம் தேதி கொலம்பியாவுடன் மோதவுள்ள போர்ச்சுகல் கடும் நெருக்கடியை சந்திக்கிறது.

* இங்கிலாந்து கானா டிரா
பாஸ்டன் அரங்கில் இங்கிலாந்து கானா அணிகளிடையே நடந்த எல் பிரிவு லீக் ஆட்டம் 0-0 என கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில் டிரா ஆனது. இங்கிலாந்து கோல் பகுதிக்குள் கானா வீரர் வாபெனா அடு தள்ளிவிடப்பட்ட நிலையில் பெனால்டி கிக் வழங்கப்படாததோடு தவறிழைத்த எஸ்ரி கோன்சாவுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்படாததும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடுவர்கள் பாரபட்சமாக செயல்படுவதாக கானா தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 6 World Cups ,Ronaldo ,Houston ,Portugal ,Cristiano Ronaldo ,Cups ,World Cup… ,
× RELATED மகளிர் டி.20 உலக கோப்பை; கட்டாய வெற்றி...