×

தெளிவு பெறுஓம்

? பகவான் அவதாரங்களில் பரசுராமனை ஏன் வணங்குவதில்லை?
– பாக்கியநாதன், சேலம்.

இதற்கு ஆன்மிக ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. ஆயினும் ஆழ்வார்களின் பாசுரங்களில் பல இடங்களில் பரசுராமன் போற்றப்படுகிறார்.

மன் அடங்க மழுவலங்கைக் கொண்ட இராம நம்பி என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே
– என்பது பெரியாழ்வார் பாசுரம்.

பரசுராமன் அவதாரம் ஒரு உக்கிரமான ஆவேச அவதாரம். இராமன் புருஷோத்தமனாக தர்மத்தை வாழ்ந்து காட்டினான்; கிருஷ்ணன் கீதையை உபதேசித்து தர்மத்தை நிலைநாட்டினான். ஆனால், பரசுராமரின் அவதாரம் என்பது அநீதி இழைத்த அரசர்களை அழிப்பதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு தற்காலிக உக்கிர அவதாரம்.பரசுராமர் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அறியப்பட்டாலும், அவருக்கான முக்கியத்துவம் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில்தான் (குறிப்பாக கேரளா, கொங்கண பகுதி மற்றும் கோவா) அதிகம்.

கடல் பின்வாங்கி உருவான நிலமே கேரளா என்றும், அதைத் தோற்றுவித்தவர் பரசுராமர் என்றும் அதனால் அது பரசுராம க்ஷேத்திரம் என்றும் சொல்கிறார்கள். வட மாநிலங்களிலோ அல்லது தமிழகத்தின் பிற பகுதிகளிலோ கோயில்களிலோ அவருடைய ஜெயந்தி உற்சவங்கள் கொண்டாடும் வழக்கம் இல்லை. இந்து வழிபாட்டு முறையில் சாந்த குணம், கருணை, மற்றும் ரக்ஷக (காக்கும்) வடிவம் கொண்ட தெய்வங்களையே இல்லங்களில் வைத்து வழிபட விரும்புவார்கள். பரசுராமரின் உக்கிரமான கோப வடிவம் காரணமாக, அவரை மக்கள் வழிபாட்டுக்குரிய தெய்வமாக அதிகம் ஏற்பதில்லை. அவரை ஒரு கடவுளாகக் கும்பிடுவதை விட, ஒரு மகா முனிவராகவும், தர்மத்தின் காவலராகவும் மட்டுமே ஆன்மிகம் பார்க்கிறது.

? வாராகி வழிபாடு இப்போது பிரபல்யமாக இருக்கிறது? இது நவீன வழிபாடா? பழங்காலத்திலிருந்து உண்டா?
– ராமசாமி, விளாத்திகுளம்.

வாராகி வழிபாடு இப்போது மிகத் தீவிரமாக, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரும் அலையாகப் பரவி வருகிறது. உண்மையில் வாராகி வழிபாடு முற்றிலும் பழங்கால வழிபாடே ஆகும். இந்து வழிபாட்டு முறையில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு பெண் தெய்வங்களை ‘சப்தகன்னியர்’ என்று வழிபடுவோம்.

கிராமப்புறக் கோவில்களில், ஆற்றங்கரைகளில் மிக நீண்ட காலமாக இருக்கும் சப்தகன்னியர் சிலைகளில், பன்றி முகத்தோடு இருக்கும் தெய்வம் தான் வாராகி. ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியபோது, அங்கே வாராகிக்குத் தனிச் சந்நதி அமைத்தார். சோழ அரசர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு, தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ‘தண்டநாதா’ (சேனாதிபதி) வடிவில் இருக்கும் வாராகியை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ‘லலிதா சகஸ்ரநாமம்’ மற்றும் ‘தேவி மகாத்மியம்’ போன்ற மிகப் பழமையான நூல்களில், லலிதாம்பிகையின் படைத் தளபதியாக வாராகி தேவி வர்ணிக்கப்படுகிறாள்.

வாராகி வழிபாடு என்பது ஆரம்பத்தில் ‘வாமாசாரம்’ மற்றும் ‘தந்திர மார்க்கம்’ வழிபாட்டு முறைகளில் மிக முக்கியமாக இருந்தது. தீவிரமான மந்திர உபாசனை செய்பவர்கள், அகோரிகள் மற்றும் ரகசிய ஆன்மிகப் பயிற்சி மேற்கொள்பவர்கள் மட்டுமே இவரை வழிபட்டு வந்தனர். சாதாரண குடும்பஸ்தர்கள் இவரை வழிபடத் தயங்கினர். இதனால், இந்த வழிபாடு பொதுமக்களிடமிருந்து தள்ளி, ரகசியமாகவே இருந்தது. முன்பு உக்கிரமாகப் பார்க்கப்பட்ட வாராகியை, இப்போது ஆன்மிகப் பெரியோர்கள் ‘‘கருணைக்கடல், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தாய்’’ என்று சாந்த வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

அசைவப் படையலுக்குப் பதிலாக சர்க்கரைவள்ளி கிழங்கு, தோல் உரிக்காத உளுந்தம்பருப்பு வடை, மாதுளம்பழம் போன்ற எளிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே வழிபடும் முறைகள் பரவலாகின. வாராஹி மனிதர்களின் துயரங்களை மிக வேகமாகத் தீர்க்கும் ‘‘சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. இது புதுமையான வழிபாடு அல்ல, நம் முன்னோர்கள் ரகசியமாகப் போற்றிப் பாதுகாத்த வழிபாட்டின் தற்கால மறுமலர்ச்சி!

?அஷ்டாவக்கிரர் என்பவர் யார்?
– ராஜசேகரன், கோவை.

அஷ்டாவக்கிரர் என்பவர் பாரத வரலாற்றில் வாழ்ந்த மிகச் சிறந்த தத்துவ ஞானி. ‘அஷ்ட’ என்றால் எட்டு, ‘வக்ரம்’ என்றால் கோணல். உடல் எட்டுக் கோணல்களுடன் பிறந்ததால் இவருக்கு இப்பெயர் வந்தது. இவர் அறிவு மற்றும் ஆன்மிக ஞானத்தில் சிகரமாக விளங்கியவர். ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டிலுமே இவரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
அஷ்டாவக்கிரரின் தந்தை ககோடர், தாய் சுஜாதா.

ககோடர் ஒரு ஏழைப் பிராமணர், வேதங்களை எப்போதும் ஓதிக் கொண்டிருப்பார். அவர் தாயின் வயிற்றில் குழந்தையாக இருந்தபோதே, தந்தையின் வேத உச்சரிப்பில் இருந்த பிழைகளைக் கவனித்து, ‘‘நீங்கள் சொல்வதில் தவறு இருக்கிறது” என்று வயிற்றிலிருந்தபடியே சுட்டிக்காட்டினார். இதனால் கோபமடைந்த தந்தை ககோடர், ‘‘என் அறிவையே கேள்வி கேட்கும் நீ, எட்டுக் கோணல்களுடன் பிறப்பாய்” என்று சாபமிட்டார். அதன் விளைவாகவே அவர் பிறக்கும்போதே கை, கால், முதுகு என உடல் உறுப்புகள் எட்டு இடங்களில் வளைந்து, கோணலாகப் பிறந்தார்.

அஷ்டாவக்கிரருக்கு சிறு வயதாக இருக்கும்போதே, அவருடைய தந்தை ஜனக மகாராஜாவின் சபையில் நடந்த வாதத்தில் தோற்று, ‘வந்தின்’ என்ற அறிஞரால் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டார். வளர்ந்த பிறகு தன் தந்தையை மீட்க ஜனகரின் சபைக்குச் சென்றார் அஷ்டாவக்கிரர்.அவர் எட்டுக் கோணல்களுடன் தள்ளாடி தள்ளாடி சபைக்குள் நுழைந்ததைக் கண்ட ஜனகரின் அவையிலிருந்த அறிஞர்கள் அனைவரும் பலத்த சிரிப்பொலி எழுப்பினர்.

அப்போது அஷ்டாவக்கிரர் அவர்களைப் பார்த்து உரக்கச் சிரித்தார். ஜனகர் ஆச்சரியப்பட்டு, ‘‘அவர்கள் உன்னைப் பார்த்துச் சிரித்தார்கள், நீ ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அஷ்டாவக்கிரர் சொன்ன பதில் உலகப் புகழ்பெற்றது:

‘‘மன்னா, நான் உமது சபையில் இருப்பது அறிஞர்கள் என்று நினைத்தேன். ஆனால், இங்கே இருப்பவர்கள் வெறும் தோலை (உடலை) மட்டுமே பார்க்கும், அஞ்ஞானிகள்போல் தெரிகிறார்கள். கரும்பு வளைந்திருந்தால் அதன் சாறு வளைந்திருக்குமா? நதி வளைந்திருந்தால் அதன் நீர் வளைந்திருக்குமா? உடலின் வளைவை வைத்து என் அறிவை எடைபோடும் இவர்களைக் கண்டுதான் சிரித்தேன்.”

இதைக் கேட்டு ஜனகர் தன் தவறை உணர்ந்து, அஷ்டாவக்கிரரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார். பின்னர், அஷ்டாவக்கிரர் வாதத்தில் வந்தினை வென்று தன் தந்தையை மீட்டெடுத்தார்.

? தமிழ் இலக்கிய நூல்களிலும் பக்தி நூல்களிலும் அந்தாதி வகைப் பாடல்கள் அதிகம் இருப்பதற்கு என்ன காரணம்?
– அனந்தநாராயணன், திருநாகேஸ்வரம்.

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அல்லது பொருளோ அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவதே ‘அந்தாதி’ எனப்படும். இந்தத் தொடை அமைப்பு ஏன் அதிகம் பயன் படுத்தப்பட்டது என்பதைப் பின்வரும் காரணங்கள் விளக்குகின்றன.

1. நினைவு வைத்துக் கொள்வது எளிது.அந்தாதி அமைப்பில், முந்தைய பாடலின் கடைசிச் சொல் அடுத்த பாடலின் தொடக்கமாக வருவதால், ‘‘அடுத்த பாடல் என்ன?” என்பதை நினைவூட்டும் சங்கிலித் தொடராக செயல்பட்டது. ஒரு பாடலை முடித்தவுடன் அடுத்த பாடல் தானாகவே நினைவுக்கு வர இந்த உத்தி பெரிதும் உதவியது.

2. பக்தி இலக்கியத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை இடையில் தடைபடாமல் தொடர வேண்டும் என்று அடியார்கள் விரும்பினர். ஒரு பாடலின் முடிவு அடுத்த பாடலின் தொடக்கமாக மாறும் போது, இறைவனைப் பற்றிய தியானம் எங்கும் முறிந்துபோகாமல், ஒரு ‘ஜபமாலை’ போலத் தொடர்ச்சியாக மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கும். இதனால்தான் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி (அந்தாதி வடிவம்) போன்றவை ஆன்மிகத்தில் உன்னத இடத்தைப் பெற்றன.

3. இதனால், ஒரு நூலில் இடையில் எந்தவொரு பாடலையும் யாரும் புகுத்தவோ (செருகல்), நீக்கவோ முடியாது. நூலின் தூய்மையையும் முழுமையையும் பாதுகாக்க இந்த இலக்கண வடிவம் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கியது.

4. அந்தாதி பாடுவதற்கு தனித்திறமை வேண்டும். தங்கள் கவித்திறனை நிரூபிப்பதற்கு அந்தாதி வடிவத்தில் பாடினார். இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம்.

? சாராவளி என்பது ஆன்மிக நூலா?
– உஷா, மந்தவெளி.
இல்லை ஜோதிட நூல்.

? கோயில்களில் மொட்டை போடுவது எதற்காக?
– கார்த்திகேயன், குடவாசல்.

‘‘முடி” என்பது நம்முடைய ‘முடிவடையாத கர்ம வினைகளையும் ஆசைகளையும்’ குறிக்கிறது. அதை இறைவனுக்கு அர்ப் பணிப்பதன் மூலம், ‘‘என் பழைய கர்ம வினைகளை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு புதிய மனிதனாகப் புறப்படுகிறேன்” என்று மனதைத் தூய்மைப்படுத்துவதே மொட்டை போடுவதன் உண்மையான தத்துவம்!

? விநாயகர் பிரம்மச்சாரியா? குடும்பஸ்தரா?
– சிவசங்கரன், திருமுல்லைவாயில்.

தெய்வங்களின் தத்துவங்களைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்காமல் வெறும் கதை அம்சத்தை மட்டும் பார்ப்பதால் வருகின்ற கேள்வி இது. விநாயகரை பிரம்மச்சாரியாகவும் குடும்பஸ்தராகவும் கருதும் பழக்கம் இருக்கிறது. இந்த உலகமாகிய குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு விநாயகருக்கு இருப்பதால் அவர் குடும்பஸ்தர் (பஹு குடும்பி) என்று எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

? பூதனையை கண்ணன் கொன்று விட்டதாக பாகவதத்தில் வருகிறது. பூதனை வதமா? மோட்சமா?
– செல்வவிநாயகம், காஞ்சிபுரம்.

பகவான் கண்ணன் ஸ்பரிசம் பட்டபின் அது வதமாக இருக்குமா? மோட்சம்தான். ஜகத்குருவான கிருஷ்ணர், தீங்கிழைக்க வந்த அரக்கி என்று பார்க்காமல், தமக்கு முதன்முதலில் பாலூட்டிய ‘தாய்’ என்ற ஸ்தானத்தை அளித்தார். அவளது பாவங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒரு தாய்க்கு என்ன நற்கதி (மோட்சம்) கிடைக்குமோ, அதே உன்னத நிலையை கிருஷ்ணர் அவளுக்கு வழங்கினார். ஆன்மிகத் தத்துவப்படி, பூதனை என்பது நம் மனதில் இருக்கும் ‘அஞ்ஞானம்’ (அறியாமை மற்றும் மாயை) என்ற நச்சுக்குக் குறியீடு.இறைவன் நம் மனதிற்குள் நுழைந்து அந்த அறியாமை என்ற நச்சை உறிஞ்சி அழித்துவிடுவார். அறியாமை அழியும் போது (வதம்), அங்கே ஆன்மா விடுதலை பெறுகிறது (மோட்சம்).

?சிதறு தேங்காயைச் சாப்பிடலாமா?
– நடராஜன், உத்தமர்கோவில்.

நாம் சிதறு தேங்காய் உடைக்கும் போது, ‘‘நம்முடைய அகந்தையும், கர்ம வினைகளும் இந்தத் தேங்காயைப் போலச் சிதறி அழியட்டும்” என்று வேண்டுகிறோம். அப்படி உடைபட்டு விழும் தேங்காய்த் துண்டுகள் இறைவனின் அருள் பெற்ற பிரசாதமாகவே கருதப்படுகிறது. எனவே, அதைச் சாப்பிடுவது தவறல்ல. விழுந்த இடம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.ஆனால் மனிதர்களுக்கு திருஷ்டி சுற்றி உடைக்கும் தேங்காயைச் சாப்பிடும் வழக்கம் இல்லை.

? நாம் மகிழ்ச்சியின்றி கவலையோடு இருப்பதற்கு என்ன காரணம்?
– ஜெகதீஷ்சர்மா, காட்டுமன்னார்கோவில்.

எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் எல்லா காரணங்களும் இதில் அடங்கி விடும்.

1. எப்பொழுதும் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது.

2. நம் வாழ்க்கையை வாழாமல் பிறரோடு சதா ஒப்பிட்டுக் கொண்டிருப்பதும் அதிலேயே நேரத்தைச் செலவிடுவதும்.

தேஜஸ்வி

Tags : Barasuraman ,Bakiyanathan ,Salem ,Alwar ,Rama ,
× RELATED கட்டாரி மங்கலத்தில் அருளும் நடராஜர்