*கல்லூரியை வேண்டாம் எனக்கூறி வெளியேறும் மாணவர்கள்
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுதிகளை திறப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், வெளியூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் கல்லூரியை வேண்டாம் எனக்கூறி டி.சி வாங்கி செல்லும் அவலம் நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கோவை அரசு கலைக்கல்லூரி, தொண்டாமுத்தூர், வால்பாறை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் புலியகுளம் பெண்கள் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர் சேர்க்கை பணிகள் நடந்து வருகிறது.
இந்த கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்க இருக்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்களில் பலர் இங்குள்ள சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் கல்லூரி மாணவர்களுக்கு என 18 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. தவிர, ஆதிதிராவிடர், சிறுபான்மை நலத்துறையின் சார்பில் விடுதிகள் இயங்கி வருகின்றன.
சிறுபான்மை நலத்துறையின் கீழ் சுந்தராபுரத்தில் மாணவர் விடுதியும், மசக்காளிபாளையத்தில் மாணவிகளுக்கான விடுதியும் உள்ளன. தவிர, கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், சுங்கம் உள்ளிட்ட இடங்களில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளுக்கு மாணவ, மாணவிகள் வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கோவை அரசு கலைக்கல்லூரியில் சுமார் 350 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் விடுதி கல்லூரி அருகேயே செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. மற்ற கல்லூரிகளுக்கு என விடுதிகள் இல்லை.
குறிப்பாக, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரிக்கு என தனியாக விடுதியில்லை. இதனால், இந்த கல்லூரிகளில் சேரும் வெளியூர் மாணவ, மாணவிகள் சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இந்த விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் அளித்தாலும், அவை பரிசீலனை செய்து தகுதியானவர்கள் விடுதியில் சேர கூடுதல் காலஅவகாசம் எடுக்கும் எனவும், கல்லூரி திறந்து 20 நாட்களுக்கு மேல் வெளியில் தங்கி கல்லூரிக்கு வர வேண்டியது இருக்கும் எனவும் கல்லூரி மற்றும் விடுதி தரப்பில் கூறுகின்றனர்.
விடுதிகள் திறக்க காலதாமதம் ஏற்படுவதால், அரசு கல்லூரிகளில் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் கலந்தாய்வுகளில் பங்கேற்ற பின் கல்லூரியை வேண்டாம் என கூறி டி.சி-யை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மாணவ, மாணவிகளின் நிலையை கருத்தில் கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சமூகநீதி விடுதிகளை கல்லூரி திறந்த ஒரு வாரத்திற்குள் மாணவர்களுக்கு திறக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,“மாணவ, மாணவிகள் சமூகநீதி விடுதிகளில் சேருவதற்கு ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் ரேங்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கு என தனி கமிட்டி உள்ளது. இந்த கமிட்டியில் எம்எல்ஏ, தன்னார்வலர்கள் ஆகியோர் இருப்பர். இந்த கமிட்டி கூடி தகுதியானவர்களை தேர்வு செய்யும். இதனால், தான் காலதாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
