தண்டராம்பட்டு: திருவண்ணாமலை அருகே மதுபோதை தகராறில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியபோது தூக்கி வீசி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் கொங்கு, விவசாயி. இவரது மகன்கள் ஆகாஷ் (25), துரை(23). கடந்த 21ம் தேதி இரவு ஆகாஷ் பெருங்கொளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள காலி இடத்தில் குடித்துக்கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிவா (22), ராஜேஷ் (25), அசோக்(26) ஆகியோரும் மது வாங்கி வந்து ஆகாஷின் அருகே அமர்ந்து குடித்துள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த துரை, தனது அண்ணன் ஆகாஷை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். போதையில் இருந்த சிவா, ராஜேஷ், அசோக் ஆகியோர், ‘நீ ஏன், அவனை கூப்பிடுகிறாய்’ எனக்கேட்டு துரையிடம் தகராறு செய்தனர். அதில் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய 3 பேரும் சேர்ந்து துரையை சரமாரி தாக்கினர்.
இதைத்தடுக்க முயன்ற ஆகாஷையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து துரை, ஆகாஷை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவு 9.30 மணியளவில் சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய 3 பேரும் துரை வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்களாம். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் 3 பேரும் மீண்டும் துரை வீட்டிற்கு வந்தனர். அப்போது துரை வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததாம்.
இதனால் 3 பேரும் பக்கத்து வீட்டின் மாடி படிக்கட்டு வழியாக ஏறி துரை வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த துரையை, 3 பேரும் சரமாரியாக தாக்கி மாடியில் இருந்து கீழே தூக்கி வீசினர். அப்போது துரை அலறியபடி கூச்சலிட்டார். இதைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைப்பார்த்த சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த துரையை, அப்பகுதியினர் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், துரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த துரை, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துரையின் அண்ணன் ஆகாஷ் நேற்று தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய 3 பேரையும் நேற்று காலை கைது செய்தனர். அவர்களை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க டிஎஸ்பி ராஜா தலைமையில் பெருங்களத்தூர் மற்றும் பி.குயிலம் கிராமங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால், கிராமத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
