*மாநில அரசை எதிர்நோக்கும் பயணியர்
மதுரை : மதுரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என, பயணிகள் வலியுறுத்துகின்றனர்.மதுரையில் கடந்த ஆண்டு ரூ.11,300 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, முதல் கட்டமாக திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 32 கிமீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்படும் என்றும்,இதில்ு திருமங்கலம் – வசந்தம் நகர் வரை உயர்நிலை மேம்பாலமும், வசந்தம் நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை சுமார் பூமிக்கடியிலும், தல்லாகுளம் – ஒத்தக்கடை உயர்நிலை பால வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டப்பட்டது.
இதற்கான, மண் பரிசோதனை, வழித்தடம், ரயில் நிலையம் அமைக்கும் இடங்கள் என, முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிந்து, ஒன்றிய அரசுக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின், டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில், இத்திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக, மெட்ரோ ரயிலை எதிர்பார்த்திருந்த மதுரை மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா அமைப்பின் மாநில தலைவர் திருமுருகன் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக மேலாண்மை இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன். தெற்கு ரயில்வேயின் துணை பொறியாளர் ஞானசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் மதுரையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி நிலையில், மெட்ரோ பயன்படுத்துவதற்கான எண்ணிக்கையில மதுரை பகுதியில் மக்கள் தொகை இல்லை என்று கூறி, திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
சுமார் 20 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மதுரை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தென் மாவட்ட மக்களின் முக்கிய தொழில் மற்றும் வணிக நகராக மதுரை பல்லாண்டுகளாக விளங்கி வருகிறது. இதனால் ஏற்படும் சாலை போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை பெருநகரத்தில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டதால், அரசு மற்றும் தனியார் துறைக்கு 50 கிமீ தூரம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும், பொதுமக்களுக்கு அரை மணி நேரம் போதுமானதாக இருக்கிறது. இதையடுத்து அடுத்தடுத்த கட்டங்களாக மெட்ரோ பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. பூந்தமல்லியில் இருந்து விரைவில் அடுத்தகட்ட மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே வட மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ள பல நகரங்களில், மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசுக்கு மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது.
எனவே தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஒன்றிய அரசுடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தி, மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
போராடும் நிலை ஏற்படும்…
மெட்ரோ ரயில் திட்டம் ரத்து குறித்து, மதுரை ரயில் பயணியர் சங்கத்தினர் கூறுகையில், ‘மதுரை மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பெரியார் நிலையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் திருமங்கலம் சென்று பஸ்களில் செல்ல வேண்டும். மேலும் போதுமான ரயில் வசதிகளும் இல்லை.
இந்த மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறினால் நகரில் இருந்து எளிதில் திருமங்கலம் செல்லலாம். இத்திட்டம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில் இதன் தேவையை உணர்ந்து பல்வேறு தரப்பினரும் போராடும் நிலை ஏற்படும்’ என்றனர்.
