×

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மக்களைதேடி மருத்துவ ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கவேண்டும்

*கலெக்டரிடம் கோரிக்கை மனு

வாலாஜா : மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கவேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ப்ரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்படி மக்களை தேடி மருத்துவம்பணியாளர்கள் சங்க மாநில தலைவர், அதன் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவோரின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கான மாத்திரை, மருந்துகள் வழங்கவும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மாதம் ரூ.4,500 ஊதியம், ரூ.1,000 ஊக்கத் தொகை ஆக ரூ‌.5500 தமிழ்நாடு நகர்ப்புற நல மருத்துவத் திட்டத்தில் வழங்கப்பட்டது. தற்போது காலகட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகையை ரூ.5,500லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 382 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் பல்வேறு சமூகநல திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, திட்ட இயக்குனர் செல்வராசு, நேர்முக உதவியாளர் கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைநம்பி, உதவி ஆணையர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் பன்னீர் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ranipet ,Ranipet Collector ,Collector ,Priya ,
× RELATED அரக்கோணம் பழனிப்பேட்டையில் ரூ.2...