சாதி ரீதியாக மாணவர்களை திட்டிய பல்கலை பேராசிரியர் மீது நடவடிக்கை மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தல்

சேலம், மார்ச் 9: சாதியை கூறி திட்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் துணை வேந்தரிடம் மனு அளித்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், நேற்று சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலுவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், சாதி ரீதியாக மாணவர்களை திட்டிய புகாருக்குள்ளான தாவர அறிவியல் துறை பேராசிரியர்  மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்ய வேண்டும். காவல்துறையின் மூலம், சம்பந்தப்பட்ட பேராசிரியரை சட்டரீதியாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேராசிரியரால் சாதி ரீதியான தாக்குதலுக்கு உள்ளான மாணவ, மாணவிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் புகார் அளிப்பதற்கான தனி பிரிவை உருவாக்கி, மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி, ஆண், பெண் நட்பு குழுக்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: