குமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி போலீசார் விசாரணை

குமாரபாளையம்,மார்ச் 9: குமாரபாளையம் அருகே மோட்டார் போடச்சென்ற பெண் கிணற்றி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தானாபதியூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி வளர்மதி(45). கடந்த 10 ஆண்டுகளாக குமாரபாளையம் அடுத்த சானார்பாளையம் வண்ணாங்காட்டில் தங்கி, குத்தகைக்கு நிலத்தை பிடித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வளர்மதி நேற்று மதியம் 11.30 மணியளவில் தண்ணீர் பாய்ச்ச மோட்டார் போட்டுவிட்டு வருவதாக கூறி கிணற்றுக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணியாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து லட்சுமணன் கிணற்றுக்கு சென்று பார்த்த போது, கிணற்றின் ஓரம் வளர்மதியின் செருப்பு மற்றும் செல்போனும், அங்கிருந்த மாமரத்தில் மாங்காய் பறித்ததற்கான குச்சியும் இருந்துள்ளது. ஆனால் வளர்மதியை காணவில்லை. மாங்காய் பறித்த போது வளர்மதி கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாமென என லட்சுமணன் சந்தேகப்பட்டார். இதுகுறித்து லட்சுமணன் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பவானி தீயணைப்புத்துறை வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி தேடினர். தண்ணீரில் மூழ்கி இருந்த வளர்மதியை சடலமாக மீட்டனர். குமாரபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>