80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் மட்டுமே தபால் வாக்கு செலுத்தலாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 9: கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பு இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குகள் செலுத்தலாம். இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக சென்று 12டி படிவம் வழங்கி வருகின்றனர். 12டி படிவத்தை போதிய விவரங்களுடன் பூர்த்தி செய்து வரும் 16ம் தேதிக்குள் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்களது வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்வார்கள். இதில் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் 12டி படிவத்துடன் உரிய சான்றிதழ்களை பெற்று, தபால் வாக்கு வழங்க நடவடிக்கை எடுப்பார். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களால் வழங்கப்படும் படிவம் 12ஐ பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை. விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு வாக்களிக்கலாம். 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தபால் வாக்களிக்க விருப்பமளித்த வாக்காளரின் வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் வாக்குகள் வழங்கப்படும். தபால் வாக்குகள் வழங்கப்பட்ட நாளன்றே வாக்காளர் வாக்களிக்க வேண்டும். இந்நிகழ்ச்சி அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி, முகவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்படும். தபால் வாக்குகள் அளித்தவுடன், உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>