கிருஷ்ணகிரி அருகே குடுமியுடன் சுற்றிய சிறுவனுக்கு கிராப் வெட்டிய இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணகிரி, மார்ச் 9: கிருஷ்ணகிரி அருகே காதில் கடுக்கன், குடுமியுடன் சுற்றித்திரிந்த சிறுவனுக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கிராப் வெட்டி அனுப்பிய சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கிருஷ்ணகிரி-மகாராஜகடை சாலையில், மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் காதில் கடுக்கன், கோழிக்கொண்டை கிராப் சகிதமாக டூவீலரில் வேகமாக வந்தான். அவனை வழிமறித்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய போது இதெல்லாம் “யூத் ஸ்டைல்” எனவும் மாடர்னாக இருப்பது தவறா? எனவும் எதிர் கேள்வி எழுப்பியுள்ளான். மேலும், அபராதம் வேண்டுமானால் விதித்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளான்.

இதையடுத்து, சிறுவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்த இன்ஸ்பெக்டர், அந்த சிறுவனை அருகிலுள்ள சலூன் கடைக்கு  அழைத்துச் சென்று அவனுக்கு முடி திருத்தம் செய்து, படிக்கும் மாணவர்கள் கல்வி கற்பதையும், ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் எனவும் தேவையில்லாத செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளார். அங்கு நடந்த சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களில் ஒரு சிலர் இன்ஸ்பெக்டரை பாராட்டியும், மற்றொருபுறம் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீடியோ எடுத்து வெளியிடுவது சட்டப்படி குற்றம், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாக வெளிவருவது கண்டிக்கத்தக்கது எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.

Related Stories:

>