×

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ; 15 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி: 7 பேர் படுகாயம்

 

லக்னோ: லக்னோ பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 மாணவர்கள் உடல் கருகி பலியாகினர். 7 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அலிகஞ்ச் பகுதியில் உள்ள உஷா மேத்தா மார்க்கில் 3 மாடிகள் கொண்ட வணிக கட்டிடம் அமைந்துள்ளது. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் உள்ள இந்த வணிக கட்டிடத்தின் 2வது மாடியில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.

கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் பலரும் அனிமேஷன் கற்க பயிற்சி மையத்தில் அதிகளவில் சேர்ந்திருந்தனர். நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வழக்கம் போல் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பயிற்சி மையம் உட்பட முழு கட்டிடத்திலும் தீ மளமளவென பரவியது. இதனால் பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் உயிர் தப்பிக்க பல வழிகளிலும் முயன்ற போதிலும், முன்வாசல், பின்வாசல் பகுதியை தீ சூழ்ந்ததால் அவர்களால் வெளியேற முடியவில்லை. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் 14 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் களமிறங்கினர். அருகில் உள்ள கட்டிடத்தின் மூலம் தீ விபத்து நடந்த வணிக வளாகத்தில் 2 பெரிய துளைகளை போட்டு உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நடந்தது. ஆனால் குறுகலான பகுதி என்பதால் தீ வேகமாக பரவியதில், கட்டிடத்தில் சிக்கிய மாணவர்கள் பலர் கருகினர். இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 15 பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். காயமடைந்தவர்கள் உடனடியாக கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி கே.கே.சிங் கூறுகையில், ‘‘தீ விபத்தை தொடர்ந்து 22 பேர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

அவர்களில் 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது’’ என்றார். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அலிகர் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு, நிலைமையை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவர் அலிகாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தீ விபத்தில் பலியான மாணவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். தெற்கு டெல்லியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியான ஒருசில வாரங்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

3 செல்லப் பிராணிகள் பலி
தீ விபத்து நடந்த வணிக கட்டிடத்தில் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெட் கிளீனிக் ஒன்றும் செயல்பட்டு வந்தது. அதுவும் முற்றிலும் எரிந்ததால், பல செல்லப் பிராணிகள் பலியாகி இருக்கக் கூடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். சம்பவ இடத்தில் 3 செல்லப் பிராணிகள் கருகி இறந்த நிலையில் போர்வையில் சுற்றி கொண்டு செல்லப்பட்டதை நேரில் பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

ரூ.2 லட்சம் நிவாரணம்
லக்னோ பயிற்சி மைய கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடியிலிருந்து குதித்து தப்பிய 2 மாணவர்கள்
தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது, கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து 2 மாணவர்கள் வெளியே ரோட்டில் குதித்து உயிர் தப்பி உள்ளனர். அவர்களுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிடி ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகளுக்குப் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags : Lucknow ,President ,Murmu ,Modi ,
× RELATED நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு...