தொப்பூர் அருகே டைல்ஸ் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

நல்லம்பள்ளி, மார்ச் 9: தொப்பூர் அருகே டைல்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிய லாரி தஞ்சாவூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சோமனூரைச் சேர்ந்த மாதேஷ் (33) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கட்டைமேடு அருகே வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் வந்த மணியரசு (27) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அதே பகுதியை சேர்ந்த வினோத் (30), மைதிலி (35),முருகேஷ் (25), மாதேஷ் (33), ஆகிய 4 பேரும்  காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மணியரசுவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>