தியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்

பல்லாவரம்: நந்தம்பாக்கம் அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டியை கொலை செய்த சித்த மருத்துவர் போலீசில் சரணடைந்தார். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (70). இவரது கணவர் அகத்திலகம் (75). இவர்கள் இவருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்தனர். அகத்திலகம், தான் வசித்து வந்த வீட்டின் ஒரு அறையில் தியானம் செய்வது வழக்கம். மற்ற நேரங்களில் யாராவது நோய் என்று வந்தால் அவர்களுக்கு சித்த வைத்தியம் செய்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீராத நோயால் பாதிக்கப்பட்ட நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணி (எ) நவரத்தின மணி (45), அகத்திலகத்திடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு பச்சிலை அரைத்து கொடுத்து மருத்துவம் பார்த்துள்ளார். இதில், மணியின் நோய் குணமானது. அதனால், அகத்திலகத்திடம் சேர்ந்து சீடனாகவே மாறிவிட்டார். மேலும், அவருடன் தியானம் செய்வது, பச்சிலைகளை அரைத்து மருந்துகள் தயாரிப்பது உள்ளிட்ட சித்த மருத்துவ சிகிச்சையும் கற்று வந்தார். கடந்த 2014ம் ஆண்டு அகத்திலகம் திடீரென இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த வீட்டை மணி பராமரித்து தியானம் செய்து வந்துள்ளார். அந்த வீட்டை, வேறு ஒரு நபருக்கு ரூ.25 லட்சத்துக்கு மலர்கொடி விற்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த மணி ஆத்திரமடைந்து மலர்கொடியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை வாங்கியவர்கள், தியான மற்றும் பூஜை அறைகளை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர். இது, மணிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு மணி போதையில் வீட்டுக்கு வந்தபோது, அங்கு மலர்கொடி தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை பார்த்து ஆத்திரமடைந்த மணி, அருகில் கிடந்த கிரைண்டர் கல்லை எடுத்து, மூதாட்டி தலையில் போட்டுள்ளார். இதில், தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் மலர்கொடி துடிதுடித்து இறந்தார். பின்னர், குன்றத்தூர் போலீசில் மணி நேற்று காலை சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூதாட்டி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நந்தம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>