100% வாக்களிப்பை ஊக்குவிக்க மகளிருக்கு கோலப்போட்டி

காஞ்திபுரம்: சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி 100 சதவீத வாக்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கோலப்போட்டியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், திட்ட அலுவலர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 100 சதவீத வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்கு பல விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் பேரணிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கோலப் போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பரிசுகளை வழங்கினார். மேலும் 100 சதவீத வாக்குகள் உறுதிபடுத்தும் வகையில் உறுதி மொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 100 சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும், வாக்களிப்பது உங்கள் உரிமை, வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களிக்க காசு வாங்க கூடாது உள்ளிட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு மகளிர் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பிரசாரம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று இறுதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது.

Related Stories: