வகுப்புகளை நடத்தக்கோரி நர்சிங் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே நர்சிங் வகுப்புகளை நடத்தக்கோரி, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் தலித் கல்வி அறக்கட்டறையின் ஒரு அங்கமான ‘டெல்டா’ என்ற நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. ஆரம்ப கட்டத்திலிருந்து நர்சிங் பள்ளி, கம்ப்யூட்டர் பயிற்சி, கேட்டரிங் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. இதில், ஓரிரு பயிற்சி வகுப்புகள் காலப்போக்கில் நடத்தப்படாமல் உள்ளது. தற்போது,  நர்சிங் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நர்சிங் வகுப்பில் செங்கல்பட்டு, சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட தலித் மாணவிகள் நர்சிங் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அப்போது, இந்த டெல்டா நர்சிங் வகுப்புகளும் நிறுத்தப்பட்டன. அதிலிருந்து ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு, ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்து பல மாதங்களாகியும் இந்த டெல்டா நிறுவனம் மட்டும் திறக்கப்படாமலும், நர்சிங் வகுப்புகள் நடத்தப்படாமலும் உள்ளன. இந்நிலையில், இங்கு பயின்று வரும் நர்சிங் மாணவிகள் தங்களது கல்வி மற்றும் நர்சிங் படிப்பு வகுப்புகள் பாதிக்கப்படுவதாகவும், வகுப்புகளை நடத்த அறக்கட்டளை நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் அறக்கட்டளை நிர்வாகம் செவி சாய்க்காததால் ஆத்திரமடைந்த நர்சிங் மாணவிகள் நேற்று அந்த டெல்டா நர்சிங் நிறுவன வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: