நன்றி குங்குமம் தோழி
நிதிக் கல்வி என்பது வெறும் பணத்தை சேமிப்பதோ முதலீடு செய்வதோ மட்டுமல்ல… எந்த ஒரு சூழலிலும் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும் மாபெரும் வாழ்வியல் கலை. இது வெறும் எண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. மனிதர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என பேச ஆரம்பித்த கீதப்ரியா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.‘‘எண்களும் லாப நஷ்ட கணக்கும் மட்டுமே நிதிக் கல்வி கிடையாது. என்னைப் பொறுத்தவரை, பெண்களுக்கும் நியூரோடைவர்சன் குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கையை தரும் வாழ்வியல் கலையிது’’ என்றவர் மேலும் விரிவாக நிதி மேலாண்மை குறித்து பேச ஆரம்பித்தார்.
நெய்வேலியில் நடுத்தரக் குடும்பத்தில பிறந்து வளர்ந்து, கோவை கல்லூரி ஒன்றில், மென்பொருள் துறையில் பொறியாளராய் தன்னை வடிவமைத்துக் கொண்டவர், தொடர்ந்து இன்டெல், ஆரக்கல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஐடி துறைகளில் பணிபுரிந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டின் வெல்த் மேனேஜ்மென்ட் துறைசார்ந்த GripDough நிறுவனத்தின் ஃபவுண்டராக எப்படி மாறினார் என்பதை கேள்வியாக அவரிடத்தில் முன்வைத்ததில்…
‘‘நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் என் அப்பா நிதி மேலாண்மை அதிகாரியாகவும், அம்மா பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்த நிலையில், அவர்களிடம் இருந்து நான் கற்ற ஒழுக்கமும், நிதி மேலாண்மையுமே என் பயணத்துக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.‘‘திருமணத்திற்குப் பிறகு, என் கணவரின் வேலை நிமித்தமாய் சிங்கப்பூர் நாட்டிற்கு குடிபெயர்ந்த நிலையில்,
அங்கும் ஐடி துறையில்தான் தொடர்ந்து பணியாற்றினேன். குழந்தைகள் பிறந்ததுமே, அவர்களை வளர்ப்பதற்காக எடுத்த சிறிய இடைவெளிதான், என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.கடந்த 15 ஆண்டுகளாக நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். இந்த நாட்டில் என்னை கவர்ந்த விஷயமே இந்த மக்களின் கடின உழைப்புதான். அந்த வகையில் சிங்கப்பூரை சுறுசுறுப்பின் தலைநகரம் என்றே சொல்வேன்.
எந்வொரு செயலும் சிஸ்டமேட்டிக்காய் நடைபெறுவதுடன், பக்காவாய் திட்டமிடும் மனப்பான்மையினையும் மக்களிடத்தில் பார்க்க முடியும். மேலும், சிங்கப்பூர் மக்களிடம் ஆயுள் முழுவதும் கற்றல் என்கிற பாசிட்டிவ் கொள்கை பிரபலம். நாற்பது, ஐம்பது வயதிலும், பல்கலைக்கழகத்தில் இணைந்து, புதிய திறன்களை மேம்படுத்த எதையாவது கற்றுக்கொண்டே, புதிய துறைக்கு தங்களை மாற்றிக்கொள்வதை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
நிதி சார்ந்த விஷயங்களை, சேமிப்பு, செலவு போன்ற பொறுப்பான விஷயங் களையும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகளிடத்தில் வெளிப்படையாகவே பேசுவார்கள். இந்த நாட்டின் இன்னொரு அழகான விஷயம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகம். அதாவது, இன்க்ளூசிவ் சொசைட்டி. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருடைய சுதந்திரமும் பாதிக்கப்படாமல் அனைவரும் மரியாதையோடு வாழ்வதற்கான உள்கட்டமைப்பை அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும், யார் உதவியும் இன்றி தாங்களாகவே சுதந்திரமாய் தங்களை இயக்கிக்கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு இங்கு வலுவானது.
சிங்கப்பூரின் இந்த வாழ்க்கை முறை,பிறருக்கு உதவும் குணம் குறித்த என் சிந்திக்கும் விதத்தையே முற்றிலும் மாற்றியது. பிஸிக்கலாய் மட்டும் அவர்களுக்கு சுதந்திரம் இருந்தால் பத்தாது. நிதி விஷயத்திலும் சுதந்திரம் வேண்டும் என்கிற புரிதல் வந்ததுமே, இந்த சிந்தனை என்னை முழுமையாக நிதி மேலாண்மை துறைக்குள் இழுத்துச் சென்றது.இந்திய நிதித்துறையின் உயரிய அமைப்பான NISM மூலம் வெல்த் மேனேஜ்மென்ட் முடித்து, போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்ற தொழில்நுட்ப விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். என் நோக்கம் வெறும் கமர்சியல் வெல்த் மேனேஜராக இருப்பது மட்டுமல்ல… இத்துறையில் உள்ள சிக்கலான பயமுறுத்தும் விஷயங்களை சாதாரண மக்களுக்கும் புரிகிற மொழியில் எளிமையாகக் கொண்டு சேர்ப்பதே.
பணம் என்றாலே அது ஆண்களுக்கானது என்கிற பிம்பம் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் பெண்கள் குடும்ப பட்ஜெட் போடுவதிலும், சேமிப்பிலும் கில்லாடிகளாய் இருப்பார்கள். ஆனால், முதலீடு என வரும்போது ஆண்கள் பார்த்துக்கொள்வார்கள் எனத் தயங்கி பின்வாங்குவார்கள். காரணம், சரியான வழிகாட்டுதலும் தன்னம்பிக்கையும் இல்லாததே. கை நிறைய சம்பாதிக்கும் கார்ப்பரேட் பெண்களுக்கே பணத்தை எங்கு முதலீடு செய்வது என்கிற தடுமாற்றம் இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்றவே என் சகோதரியுடன் இணைந்து HerGrip என்ற திட்டத்தை தொடங்கினேன்.
மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே எங்களின் தாரக மந்திரம். வெல்த் மேனேஜ்மென்ட் குறித்து அறிய முற்படும் பெண்களை, ஒரு காகிதத்தில் அவர்களின் சொத்து மற்றும் கடன்களை வரிசையாக எழுதி பர்சனல் பேலன்ஸ் ஷீட் ஒன்றை தயாரிக்கச் சொல்வோம். அதை எழுதும் போதே, அவர்களுக்குள் பொருளாதார புரட்சி தொடங்கிவிடும். தங்களிடம் உள்ள கையிருப்பின் நிதர்சனத்தை பார்க்கும் போதே மிகப்பெரிய மாற்றம் பெண்களுக்குள் வரத் தொடங்குகிறது.
பணம் என்றாலே பட்ஜெட் போடுவது மட்டுமே நமக்கு ஞாபகத்தில் வரும். ஆனால், வெல்த் மேனேஜ்மென்ட் என்பது அதையும் தாண்டி காப்பீடு, முதலீடு, வரி சேமிப்பு மற்றும் நம் ஓய்வூதிய காலத் திட்டமிடல் என நம் வருமானத்தின் ஒட்டு மொத்த பயணத்தையும் உள்ளடக்கியது. சுருக்கமாய் நம்மிடம் இருக்கும் பணத்தை, இன்றைக்கு மட்டுமல்லாமல், நம் எதிர்காலத்திற்கும் புத்திசாலித்தனமாய் பயன்படுத்துவது எப்படி என சொல்லி்த் தரும் கலை.
தங்களின் எதிர்கால கனவுக்கு ஏற்ப போர்ட்போலியோவை எப்படி உருவாக்குவது? ரிஸ்க் எடுக்கும் திறன், நஷ்டங்களை தவிர்க்க முதலீடுகளை எப்படி பிரித்துப் போடுவது போன்ற அனைத்தையும் நடைமுறை உதாரணங்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறோம். தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் என பல்வேறு முதலீடுகள் குறித்தும் ஆழமாக கற்றுக் கொடுப்பதுடன், சப்போர்ட் கம்யூனிட்டி ஒன்றுடன் குழுவாய் இணைந்து இவற்றையெல்லாம் அவர்கள் கற்றுக் கொள்ளும்போது நிதி குறித்த பயம் பெண்களை விட்டு மொத்தமாய் விலகிவிடுகிறது.
நிதி மேலாண்மை என்பது ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை மற்றும் பணம் தொடர்பான முடிவுகளை, சுய புத்தியோடும் தன்னம்பிக்கையுடனும் எடுக்க உதவும் லைஃப் ஸ்கில் என்றே சொல்ல வேண்டும். இன்னும் எளிமையாய் சொன்னால், ஒரு நபர் அல்லது ஒரு குடும்பம் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேமிப்பது, எப்படி பாதுகாப்பது, எப்படி பல மடங்காக வளர்ப்பது என்பதற்கான ஒரு ரோட் மேப்தான் வெல்த் மேனேஜ்மென்ட். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் இதில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்கிறார்கள். தன் பணத்தை பற்றிய முடிவை பெண் தன் சுய புத்தியோடும், முழு தன்னம்பிக்கையோடும் எடுப்பதற்கான பாதுகாப்பான தளமே Hergrip.
மேலும், என் மகன் ஒரு நியூரோடைவர்சிட்டி (Neurodiversity) குழந்தையாக இருந்ததால், பெற்றோராக நாங்கள் எங்கள் மகனை குறைபாடுள்ள குழந்தையாய் பார்க்காமல், வித்தியாசமான திறமை படைத்தவனாய் பார்க்கத் தொடங்கினோம். அவனுக்கு நிதி மேலாண்மை, கணிதம் இவற்றை புரிய வைப்பதற்காகவே சிங்கப்பூரில் செயல்படுகிற, டிஸ்லெக்ஸியா அசோசியேஷனில் இணைந்து, ஸ்பெஷல் எஜுகேஷன் பயிற்சி எடுத்தபோதே, நிதிக் கல்வி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்பது எனக்கு தெளிவாய் புரிந்தது.அதன் பிறகே வெல்த் மேனேஜ்மென்ட் என்பதை வெறும் வணிக நோக்கமாய் பார்க்காமல், எளிய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் புரிகிற மொழியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற லட்சியமாக இது மாற ஆரம்பித்தது.
வீட்டில் அம்மா வெல்த் மேனேஜ்மென்ட் குறித்து படிப்பதைப் பார்த்து குழந்தைகளும் கற்க ஆரம்பிப்பதால், GriptoKids என்கிற குழந்தைகளுக்கான பிரிவு எங்களிடம் உருவானது.டீனேஜ் பிள்ளைகளும் பெரியவர்களைவிட மிக வேகமாய் ரிஸ்க் மற்றும் முதலீட்டை லாஜிக்கலாக புரிந்துகொள்வதால் இவர்களுக்கும் நிதியறிவு மிகமிக அவசியம் என்பதை உணர்ந்து, Griptoteens திட்டத்தை அடுத்து தொடங்கினோம்.
பணத்தின் மீது இழப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற எமோஷனல் பயம் பெரியவர்களுக்கு எப்போதும் இருக்கும். ஆனால், டீனேஜ் இளைஞர்களுக்கு அந்த எமோஷனல் பேக்கேஜ் கிடையாது. காரணம், இளைஞர்கள் எண்களை வெறும் எண்களாகவே பார்க்கிறார்கள். பெருகிவரும் பண மோசடிகள், தவறான ஆன்லைன் ஆலோசனைகளிலிருந்து தப்பிக்க பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் முக்கியம் என்பதை டீனேஜ் வயதிலேயே கற்றுக் கொடுக்கிறோம்.
நிதியறிவு பெற்ற டீனேஜ் தலைமுறை பெற்றோர்களாக நாளை மாறும்போது மாற்றம் வரும். எதிர்காலத்தில் நிதிக் கல்வி என்பது நம் தாய்மொழியை கற்பது போல மனிதர்களின் அடிப்படை இயல்பாய் மாறிவிடும். அப்படி மாறுகிறபட்சத்தில், இன்று நாம் பார்க்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முற்றிலும் மறைந்துவிடும்’’ என்றவாறு விடைபெற்றார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
