×

மேலும் ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது: முதல்வர் தொகுதியில் மீண்டும் மின்வெட்டு

பெரம்பூர்: தமிழக முதல்வரின் சொந்த தொகுதியில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வரின் சொந்த தகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அடிக்கடி மின்வெட்டு பிரச்ைன ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, நள்ளிரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் தூக்கமின்றி தவிக்கும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாசர்பாடி, சர்மா நகர், முல்லைநகர்,கண்ணதாசன் நகர், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்களின் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதன்காரணமாக தற்போது ஓரளவிற்கு நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்கேபி.நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தனர். அந்த பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு 11.40 மணியளவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தன் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் உயர் மின்னழுத்தம் காரணமாக தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறியது. இதுபற்றி அறிந்ததும் செம்பியம் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்துவந்தனர். இவர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதன்காரணமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை கந்தன் தெரு, துளசிங்கம் தெரு, முனியப்ப தெரு, நட்டால் கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ‘’கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, மின்சார பிரச்னைக்கு தீர்வுகாணவேண்டும். டிரான்ஸ்பார்மரை சீரமைக்கவேண்டும்’ என்றனர்.

Tags : Perampur ,Tamil Nadu ,Assembly ,
× RELATED தூய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை...