* நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார்
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம் மல்லி சாலையில் குளம்போல் தேங்கியுள்ள கழிவுநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்று நாயுடுபுரம். இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்ல மல்லி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மல்லி சாலை பகுதியிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மல்லி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மேலும், இப்பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சாலையில் தேங்கியுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுநீரை கடந்தே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மல்லி சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை வெளியேற்ற விரைந்து வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
