தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடையில் தினகரன் செய்தி எதிரொலியால், தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கும், தினகரன் நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், முதலைபட்டி, சேப்ளாப்பட்டி ஆகிய 3 ஊராட்சிகள் ஆற்று பாசனமாக இருந்து வருகிறது. மேலும் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சி கிராமங்கள் குளம் மற்றும் கிணற்று பாசன பகுதியாகவும் இருந்து வருகிறது.
இந்த பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக நெல் சாகுபடியை செய்து வருகின்றனர்.
இதில் அறுவடை செய்கின்ற நெற்களை திருச்சி, மணப்பாறை, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்தனர். அப்போது இடைதரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை நடைபெற்று வந்து உள்ளது. இதனால் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, இடைத் தரகர்கள் இல்லாமல் அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கே விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை பெறவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை அடுத்து முன்னால் குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம் முயற்சியால் தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், கழுகூர் மற்றும் கல்லடை ஊராட்சி பகுதியில் சம்பா சாகுபடி மற்றும் கோடை சாகுபடி பருவ காலங்களில் அறுவடை நடைபெறும் போது தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செயல்பட்டு வந்தது. இதேபோல் இந்த ஆண்டிற்கான கோடை நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்டு வரும் நெற்களை கல்லடை மாரியம்மன் கோவில் அருகில் விவசாயிகள் சேமித்து வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அதிகாரிகள் யாரும் வராமல் இருந்து வந்தனர். மேலும் அவ்வப்போது மழை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். இதனால் கோடை நெல் அறுவடை நடைபெற்று வருவதால் கல்லடை ஊராட்சி கல்லடை மாரியம்மன் கோவில் அருகே தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்த செய்தி கடந்த 18ம்தேதி அன்று தினகரன் நாளிதழில் வெளிவந்தது.
இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் உத்தரவின் பேரில் கல்லடையில் கோடை நெல் அறுவடைக்கான தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தோகைமலை, பாதிரிபட்டி, ஊத்துப்பட்டி, பொருந்தலூர், பில்லூர், கள்ளை, புத்தூர், தளிஞ்சி, கல்லடை, வடசேரி, ஆர்.டி.மலை, புழுதேரி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி ஆகிய வருவாய் கிராம விவசாயிகள் தங்களது கோடை அறுவடை நெல்லை அளித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றி தொpவித்து உள்ளனர்.
