விவசாயிகளிடம் கடனை திருப்பி செலுத்தகோரி தனியார் வங்கி மிரட்டல்

கரூர், மார்ச் 9: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில் தனியார் வங்கி கடனை திருப்பி செலுத்தக்கோரி ஆட்களை வைத்து மிரட்டுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை குறிப்பிட்ட தனியார் வங்கியில் அடமானம் வைத்து கடன்களை வாங்கியுள்ளனர். தற்சமயம் கொரோனோ பாதிப்பு மற்றும் பருவம் மாறி பெய்த கனமழை போன்றவற்றால் பல விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை சரியாக செலுத்த இயலவில்லை. ஆனால், வங்கி நிர்வாகம், கடன் பெற்ற விவசாயிகளின் வீடுகளுக்கு ஆட்களை அனுப்பி மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஏராளமான விவசாயிகள் இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: