நடவடிக்கை எடுக்க கோரிக்கை தெரசா கார்னர் பகுதியில் சிக்னல் அமைக்காததால் போக்குவரத்து நெருக்கடி

கரூர், மார்ச் 9: கரூர் நகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க உடனடியாக சிக்னல் அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் வழியாக கரூரில் இருந்து திருச்சி, புலியூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், வெள்ளாளப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கான வாகனங்கள் செல்கிறது. தெரசா கார்னர் பகுதியின் மையப்பகுதியில் ஒருபுறம் புலியூர் பகுதிக்கும், மற்றொரு புறம் திருச்சி நோக்கியும் பேருந்துகள் செல்கின்றன. இந்நிலையில், இந்த சந்திப்பு பகுதியின் மையத்தில் சிக்னல் அமைக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதுநாள் வரை போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படவில்லை.

இதன் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மூன்று வழிப் போக்குவரத்து நடைபெறும் இந்த பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி வாகன விபத்துக்களும் நடைபெறுகிறது. இதன் அருகில், அரசு அலுவலகங்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் வாகன போக்குவரத்தும் அதிகளவு உள்ளது. எனவே, இந்த பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: