குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மனுக்களை பெட்டியில் போட்ட பொதுமக்கள்

திருவண்ணாமலை, மார்ச் 9: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களுடன் வந்த பொதுமக்கள், அங்கிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது, இந்த தகவல் தெரியாமல், கோரிக்கை மனுக்களுடன் நேற்று 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தெரிவித்தனர். எனவே, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில், கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்நிலையில், செங்கம் தாலுகா, தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் மனைவி பிரியா என்பவர், சத்துணவு வேலை வாங்கித்தருவதாக ₹3.90 லட்சத்தை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவுடன் வந்திருந்தார்.

ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரிகளை சந்திக்க முடியாது என தெரிவித்தனர். எனவே, அவரும் அங்கிருந்த பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றார்.

Related Stories: