அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு 4 இடங்களில் அனுமதி தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

அணைக்கட்டு, மார்ச் 9: வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அணைக்கட்டு ஒன்றியம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சில பகுதிகள் ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகள், மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகள் வருகிறது. இதில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் இந்த பகுதியில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டு மனுக்கள் அளித்திருந்தனர். அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமன், துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி மற்றும் வருவாய் துறையினர் அரசியல் கட்சியினர் கேட்டிருந்த இடங்களை ஆய்வு செய்து வந்தனர். அதில் நான்கு இடங்கள் மட்டுமே அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்திலும், அணைக்கட்டு மெயின் பஜார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, ஒடுக்கத்தூர் பேருந்து நிலையம், தெள்ளூர் கூட்ரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுவர் விளம்பரங்கள் சம்பந்தமாக அரசியல் கட்சியினர் கொடுத்துள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கும் விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது என அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: