மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று அனுப்பப்படுகிறது

திருப்பூர், மார்ச் 9: திருப்பூரில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவை தொகுதி வாரியாக இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற  தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டரும் , தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர்  அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.  இதில் பல்லடம் மற்றும் திருப்பூர் (தெற்கு) வட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. கணினி வழியில் குலுக்கல் நடத்தி அதற்குரிய தொகுதிகளுக்கான எண் இடப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

மேலும் ஒதுக்கீடு செய்யபப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.  கணினி குழுக்கள் செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகம் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு அலுவலகத்தில் உள்ள கிடங்கிலிருந்து இன்று (9ம் தேதி) திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படவுள்ளது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: