×

திருப்பூர் குருவாயூரப்பன் நகரில் அடிப்படை வசதி கேட்டு 2வது மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர், மார்ச் 9: திருப்பூர் குருவாயூரப்பன் நகரில்அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, மாநகராட்சி 2-து மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட குருவாயூரப்பன் நகர், எஸ்.ஆர்.வி.நகர் ஆகிய பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான தார்சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் ஆகியவை செய்து தரப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சிகாமணி தலைமையில், இப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த மாநகராட்சி உதவி ஆணையர் செல்வநாயகத்திடம் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, கோரிக்கை விடுத்தனர். அவரும், நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : 2nd Zonal Office ,Tirupur Guruvayoorappan ,
× RELATED திருப்பூர் குருவாயூரப்பன் நகரில்...