திருப்பூர் வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம்

திருப்பூர், மார்ச் 9: கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. ஆகையால், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு சராசரியாக 500-ஆக இருந்து வருகிறது.  இதற்கிடையே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பரிசோதனையையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகையால், வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தவர்களுக்கும், இனி வருபவர்களும் கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்,.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: