சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 தொகுதிகளுக்கு 3231 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

ஊட்டி, மார்ச் 9: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுழற்சி முறையில் 3231 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை சுமூகமாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது. இதை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, பிங்கர்போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கு திறக்கப்பட்டு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக சரி பார்த்து அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன.

இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் ஊட்டி தொகுதியில் 98,353 ஆண்கள், 1 லட்சத்து 06 ஆயிரத்து 775 பெண்கள், இதர வாக்காளர்கள் 10 பேர் என 2 லட்சத்து 05 ஆயிரத்து 138 வாக்காளர்களும், கூடலூர் தொகுதியில் 91,301 ஆண்கள், 99,999 பெண்கள், இதர வாக்காளர்கள் 7 பேர் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 307 பேரும், குன்னூர் தொகுதியில் 92,108 ஆண்கள், 96,496 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 604 பேர் என 3 தொகுதிகளிலும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 762 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 03 ஆயிரத்து 270 பெண் வாக்காளர்களும், இதர 17 வாக்காளர்கள் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 049 பேர் உள்ளனர்.

ஊட்டி தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், கூடலூர் மற்றும் குன்னூரில் தலா 280 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது 1508 வாக்குபதிவு இயந்திரங்கள், 1140 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1197 விவிபேட் என மொத்தம் 3845 இயந்திரங்கள் உள்ளன.  ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதற்கட்ட சுழற்சி முறையில் மூன்று தொகுதிகளுக்கும் தலா 1042 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1147 விவிபேட் என மொத்தம் 3231 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. போதுமான அளவிற்கு கூடுதலாகவே இயந்திரங்கள் உள்ளன. ஊட்டி தொகுதிக்கான இயந்திரங்கள் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியிலும், கூடலூர் தொகுதிக்கு புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூர் தொகுதிக்கு பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரியிலும் வைக்கப்படும். மேலும் சிசிடிவி கேமரா, வெப் கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோனிகா ரானா, ரஞ்சித் சிங், ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: