நேரு யுவகேந்திரா சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி

ஊட்டி, மார்ச் 9: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் நேரு யுவகேந்திரா சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த அறிவிப்பு வந்ததுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மேலும், இளம் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள் மற்றும் கடந்த தேர்தலின் போது குறைவான வாக்குப்பதிவான வாக்குச்சாவடிகள், அருகில் உள்ள வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மேலும், நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு  வருகின்றன.

கறை நல்லது என்ற மைய கருத்தினை அடிப்படையாக வைத்து, கடந்த தேர்தலின் போது வாக்குப்பதிவு குறைவான காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் கோலம் போடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களிடையே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. நேரு யுவகேந்திரா சார்பில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் பாபு, உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, ராமகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: