×

மாவட்டத்தில் பனியின் தாக்கம் குறைந்தது... பகலில் வெயில் வாட்டுது...

ஊட்டி, மார்ச் 9: நீலகிரியில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை கடும் உறைபனி காணப்படும். இச்சமயங்களில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனால், குளிர் மிக அதிகமாக இருக்கும். இம்முறை ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவ மழை பெய்த நிலையில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. அதேசமயம், ஜனவரி மாதம் 15ம் தேதிக்கு பின் பனியின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. பலநாட்கள் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸிற்கு  குறைவாகவே பதிவாகியிருந்தது. கடந்த வாரம் முதல் பனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது, மாவட்டத்தில் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இரவிலும் சூடு அதிகமாக காணப்படுகிறது. அதேபோல், குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளிலும் பனியின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், ஊட்டியில் மட்டுமே குளிர் காணப்படுகிறது. மற்ற பகுதிகளில் குளிர் குறைந்து சமவெளிப் பகுதியை போன்று பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி