மாவட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் மூலம் 36 லட்சம் பேருக்கு குடிநீர் சப்ளை 30 வருஷத்துக்கு பஞ்சமில்லை

கோவை, மார்ச் 9:  கோவை மாநகராட்சியில் சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு திட்டத்தில் சுமார் 12 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சியில் சுமார் 5 லட்சம் பேருக்கும், 37 பேரூராட்சிகளில் 9 லட்சம் பேருக்கும், 228 கிராம ஊராட்சிகளில், 2,238 கிராம குடியிருப்புகளில் சுமார் 10 லட்சம் பேர் என மாவட்ட அளவில் 36 லட்சம் பேருக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடிநீர்  வழங்கப்படுகிறது.

குடிநீர் திட்டத்தில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக கோவை முதன்மை இடத்தில் இருக்கிறது.  குடிநீர் வாரியம் மூலம் சிறுவாணி, பவானி, ஆழியாறு, அமராவதி, பில்லூர் என குடிநீர்  திட்டங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.  கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் திட்டம், அம்ரித் திட்டம், பேரூர்  வடவள்ளி திட்டம், குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் வட்டாரத்திற்கான அம்ரித் திட்டம், ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன் பட்டி குடிநீர் திட்டம், கோவை நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டங்கள், பில்லூர் 3வது குடிநீர் என 15க்கும் மேற்பட்ட  திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது நடக்கும் குடிநீர் திட்டங்களின் மூலமாக 2050 ஆண்டு வரை, அதாவது மேலும் 30 ஆண்டு வரை மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்ய முடியும். கோவை மாவட்டம் எப்போதும் குடிநீர் தடையில்லாத மாவட்டமாக உருவாகி வருகிறது. கோவை மாநகராட்சியில் 101 மில்லியன் லிட்டர் குடிநீரும், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் 175 மில்லியன் லிட்டர் குடிநீரும் என 276 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டில் குடிநீர் சப்ளை ஏறக்குறைய இருமடங்கு அதிகமாகியுள்ளது. மேலும் பயன்பாட்டிற்கு வரவுள்ள குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் சப்ளை 30 முதல் 50 சதவீதம் அதிகரிக்கும். கோவை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் குடிநீர் பஞ்சம் கிடையாது. மாநகரில் தனி நபர்  தினசரி குடிநீர் அளவு 135 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பகுதிகளில் தனி நபர் குடிநீர் 150 லிட்டருக்கும் அதிகமாகிவிட்டது. நகராட்சி பகுதிகளில் தனி நபர் தினசரி குடிநீர் 125 லிட்டர், கிராமங்களில் 70 முதல் 110 லிட்டர் வரை கிடைக்கிறது.

ஒரு காலத்தில் குடிப்பதற்கு மட்டுமே குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இப்போது சமையல் பணிகளுக்கும் குடிநீரை பயன்படுத்தும் அளவிற்கு சப்ளையை அதிகரித்து இருக்கிறோம். கோவையை முன் மாதிரியாக வைத்து இதர மாவட்டங்களிலும் குடிநீர் திட்ட பணிகள் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் பணிகள் நடத்தப்பட்டது’’ என்றனர்.

Related Stories:

>