×

கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு இ-பாஸ், கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் அவசியம்

கோவை, மார்ச் 9: கேரளா மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தீவிர சோதனை நடைபெறும் என்றும், கொரோனா இல்லை என்று பரிசோதனை அறிக்கை இருந்தால் மட்டுமே கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறினார் இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது: கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கேரளா எல்லையையொட்டியுள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை வாளையார், வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச்சாவடிகள், வால்பாறை, ஆனைக்கட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் தீவிர சோதனை நடத்தப்படும்.
இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் இருந்தும், கொரோனா இல்லை என்ற பரிசோதனை அறிக்கையை காண்பிக்காவிட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லலாம். ஆனால் வரும்போது கொரோனா பரிசோதனை அறிக்கை, இ-பாஸ் அவசியமாகும். எல்லைப்பகுதியில் தொழில் செய்பவர்கள் தினமும் வந்து செல்லும் பிரச்சினையில் ஏற்கனவே உள்ள நடைமுறை கடைபிடிக்கப்படும். கேரளாவில் இருந்து வரும் ரயில்களில் இருந்து இறங்கும் பயணிகளை கண்காணிக்க போத்தனூர், கோவை ரயில் நிலையம் ஆகிவற்றில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. தினமும் 50 பேருக்குள் கொரோனா கண்டறியப்படுகிறது. முன்பு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா என்றால் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பாதிக்கப்படும் நிலைமை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. ஒண்டிப்புதூர், கணபதி, சரவணம்பட்டி, சவுரிபாளையம், காளப்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் ஓரளவு உள்ளது. இதுவும் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore ,Kerala ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு