சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

கோவை, மார்ச் 9: கோவையில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.154 வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் பாமாயில் மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து குரூட் பாமாயிலாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலாகவும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நல்லெண்ணை, கடலை எண்ணெயை விட பாமாயில் விலை குறைவு என்பதால் வீடுகளில் அதிகளவில் சமையல் எண்ணெயாக பாமாயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எண்ணெய், கடந்த வாரம் ரூ.143-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் பாமாயில் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.154 வரை விற்பனை செய்யப்படுகிறது. மலேசியாவில் பாமாயில் விலை உயர்வு காரணமாக, இங்கும் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தவிர, நல்லெண்ணை விலையும் ரூ.10 உயர்ந்துள்ளது.

பாமாயில் விலை உயர்வு மற்ற எண்ணெய்களிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.  இந்த கடும் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சமையல் காஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளதாக இல்லத்தரசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்து மணியகாரன்பாளையத்தை சேர்ந்த காந்திமதி கூறுகையில், “எங்கள் குடும்பத்திற்கு மாதம் 6 லிட்டர் வரை பாமாயில் தேவைப்படுகிறது. இதில், ஒரு லிட்டர் ேரஷன் மூலம் பெறப்படுகிறது. மீதமுள்ள 5 லிட்டர் எண்ணெயை கடையில்தான் வாங்கி வருகிறோம். ரூ.114-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எண்ணெயின் விலை தற்போது ரூ.154-ஆக உயர்ந்துள்ளது. தவிர, காய்கறிகளின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாத சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்கள் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. இதே போல் அனைத்து பொருட்களிலும் விலை உயர்வு ஏற்பட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என தெரியவில்லை” என்றார்.

Related Stories:

>