கோடை வெயிலை சமாளிக்க டிராபிக் போலீசாருக்கு நீர் மோர் வழங்கும் திட்டம்

ஈரோடு,மார்ச்9: ஈரோடு மாநகரில் போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்த வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் போலீசார் 54 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுட்டெரிக்கும் வெயிலில் போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா முன் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து டி.எஸ்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார்.  ஈரோடு எஸ்பி தங்கதுரை கலந்து கொண்டு  திட்டத்தினை துவக்கி வைத்தார். இதுகுறித்து எஸ்பி தங்கதுரை கூறுகையில், சுட்டெரிக்கும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு காலை, மதியம் இருவேளையும் நீர் மோர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த 3 மாதம் வரை தொடரும். மாநகரில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்த தேவையை விட அதிகமாக போலீசாரை வழங்கியுள்ளோம். இது தவிர தினசரி ஆயுதப்படையில் இருந்து 10 போலீசாரை பணியமர்த்தி வருகிறோம். போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.

Related Stories: