×

சிறுநீரகத்தின் ‘வடிகட்டி வீக்கம்’ (Glomerulonephritis):

நன்றி குங்குமம் டாக்டர்

அலட்சியப்படுத்தக் கூடாத அச்சுறுத்தல்!

சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை

நம் உடலில் ஓயாமல் உழைக்கும் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களுக்கு (Kidneys) முதன்மையான இடமுண்டு. பலரும் இதயத்தையும் மூளையையும் பற்றிப் பேசும் அளவிற்குச் சிறுநீரகங்களைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், உடலின் தூய்மைப் பணியைச் செய்யும் இந்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக வேலைநிறுத்தம் செய்தாலோ அல்லது பழுதடைந்தாலோ ஒட்டுமொத்த உடலும் நச்சுக்காடாக மாறிவிடும்.

சிறுநீரக நோய்களில் பல வகைகள் உண்டு. அதில் மிக முக்கியமானது, ஆனால் பொதுமக்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாத ஒரு நோய் தான் ‘குளோமெருலோநெப்ரைடிஸ்’ (Glomerulonephritis). இதை நாம் தூய தமிழில் ‘வடிகட்டி வீக்கம்’ அல்லது ‘சிறுநீரக வடிகட்டி அழற்சி’ என்று அழைக்கலாம். இந்நோய் எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து நம்மை எப்படிக் காத்துக் கொள்வது? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் மிக விரிவாகக் காண்போம்.

‘நெஃப்ரான்கள்’ (Nephrons) சிறுநீரகத்தின் அடி நாதம்.

இந்த ஒவ்வொரு நெஃப்ரானின் தலைப்பகுதியிலும் இரத்தக் குழாய்கள் ஒரு பந்து போலச் சுருண்டு காணப்படும். இந்த இரத்தக் குழாய் பந்தைத் தான் நாம் ‘குளோமெருலஸ்’ (Glomerulus) என்கிறோம். இதைத்தான் நாம் எளிமையாக நுண் வடிகட்டி என்று குறிப்பிடுகிறோம்.நம் வீட்டில் பயன்படுத்தும் ‘வாட்டர் ஃபில்டரில்’ உள்ள மெல்லிய துளைகள் கொண்ட வடிகட்டியைப் போலத்தான் இதுவும் செயல்படுகிறது.

இதயம் இறைக்கும் இரத்தம் இந்த நுண் வடிகட்டிகளுக்குள் வரும்போது, இரத்தத்தில் உள்ள கழிவுகளும், நச்சுக்களும், உபரி நீரும் வடிகட்டப்பட்டுச் சிறுநீராக மாறுகின்றன. அதே நேரத்தில், உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் (Proteins), இரத்த அணுக்கள் (Red Blood Cells) போன்றவை இந்த வடிகட்டியைத் தாண்டி வெளியேறாமல், மீண்டும் இரத்த ஓட்டத்திலேயே தக்கவைக்கப்படுகின்றன.

‘வடிகட்டி வீக்கம்’ (Glomerulonephritis) என்றால் என்ன?

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்: இந்த வடிகட்டியில் வீக்கம் ஏற்பட்டால் என்ன ஆகும்?வீட்டில் உள்ள வாட்டர் ஃபில்டரின் வடிகட்டி பழுதடைந்தால் என்ன நடக்கும்? ஒன்று, தண்ணீர் வடியாமல் அடைத்துக் கொள்ளும்; அல்லது வடிகட்டியில் பெரிய ஓட்டை விழுந்து சாக்கடைத் தண்ணீரும், நல்ல தண்ணீரும் கலந்து வெளியேறும் அல்லவா? அதே கதைதான் நம் உடலிலும் நடக்கிறது. பல்வேறு காரணங்களால் இந்த நுண் வடிகட்டிகளில் (Glomeruli) அழற்சியோ அல்லது வீக்கமோ ஏற்படுவதைத் தான் ‘குளோமெருலோநெப்ரைடிஸ்’ என்கிறோம். இந்த வீக்கம் ஏற்படும் போது வடிகட்டியின் செயல்பாடுகள் முற்றிலும் தலைகீழாக மாறுகின்றன.

* இரத்தத்தில் உள்ள கழிவுகளை இதனால் ஒழுங்காக வடிகட்ட முடியாது. இதனால் நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடும்.

* அதே சமயம், வடிகட்டியில் உள்ள துளைகள் பெருத்துவிடுவதால், உடலுக்குள் பத்திரமாக இருக்க வேண்டிய புரதச் சத்துக்களும், சிவப்பு இரத்த அணுக்களும் வடிகட்டியைத் தாண்டிச் சிறுநீர் வழியாக வெளியேறத் தொடங்கிவிடும்.

வடிகட்டி வீக்கத்தின் இரு முகங்கள்: தீவிர நிலை vs நாள்பட்ட நிலைமருத்துவ ரீதியாக இந்த வடிகட்டி வீக்கத்தை அதன் வேகத்தையும் கால அளவையும் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

அ) தீவிர வடிகட்டி வீக்கம் (Acute Glomerulonephritis)

இது திடீரென்று தோன்றும் ஒரு நிலை. நேற்று வரை நன்றாக இருந்த ஒருவருக்கு, திடீரெனச் சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ இந்த வீக்கம் தீவிரமடையும். பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்ட பிறகு இது உண்டாகிறது. சரியான நேரத்தில் கண்டறிந்தால் இதை முழுமையாகக் குணப்படுத்திவிட முடியும்.

ஆ) நாள்பட்ட வடிகட்டி வீக்கம் (Chronic Glomerulonephritis)

இது ஒரு அமைதியான கொலையாளி (Silent Killer). எந்தவிதமான சத்தமும் இல்லாமல், வெளியில் பெரிய அறிகுறிகளைக் காட்டாமல், பல மாதங்கள் அல்லது வருடக் கணக்கில் மெல்ல மெல்லச் சிறுநீரக வடிகட்டிகளை அழித்துக் கொண்டே இருக்கும். பலருக்குத் தற்செயலாக இரத்தப் பரிசோதனை செய்யும் போதுதான் தங்களுக்கு இந்நோய் இருப்பதே தெரியவரும். இது நாளடைவில் ‘சிறுநீரகச் செயலிழப்பிற்கு’ (Kidney Failure) வழிவகுக்கக் கூடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை.

உடலைக் காட்டும் கண்ணாடிகள்: முக்கிய அறிகுறிகள்

வடிகட்டி வீக்கம் நம் உடலில் தோன்றிவிட்டால், உடல் சில எச்சரிக்கை மணிகளை ஒலிக்கும். அவற்றை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் இதோ:

முகத்திலும் கால்களிலும் வீக்கம் (Edema)

வடிகட்டிகள் பழுதடைவதால் உடலின் உபரி நீரையும் உப்பையும் வெளியேற்ற முடியாது. குறிப்பாகக் காலையில் தூங்கி எழும்போது கண்களைச் சுற்றியும், கணுக்கால்களிலும், முகத்திலும் நீர் கோர்த்து பலத்த வீக்கம் காணப்படும். கைவிரல்களில் மோதிரம் போட முடியாத அளவிற்கு வீக்கம் வரலாம்.

கொக்கோ கோலா நிறத்தில் சிறுநீர் (Hematuria)

வடிகட்டியின் துளைகள் பெரிதாகி விடுவதால், தப்பிக்கும் சிவப்பு இரத்த அணுக்கள் சிறுநீரில் கசிகின்றன. இதனால் சிறுநீர் வழக்கமான மஞ்சள் நிறத்தில் இல்லாமல், சிவப்பு, பழுப்பு அல்லது தேநீர் மற்றும் கொக்கோ கோலா நிறத்தில் வெளியேறும்.

நுரை போன்ற சிறுநீர் (Proteinuria)

உடலின் கட்டமைப்புக்குத் தேவையான ‘ஆல்புமின்’ (Albumin) என்ற முக்கியப் புரதம் சிறுநீரில் அதிக அளவில் வெளியேறத் தொடங்கும். இதனால், நாம் சோப்பு நீரைப் பார்க்கும் போது ஏற்படுவது போலச் சிறுநீரில் அதிகப்படியான நுரை வரும்.

உயர் இரத்த அழுத்தம் (Hypertension)

சிறுநீரகம் திரவச் சமநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதாலும், சில ஹார்மோன் மாறுபாடுகளாலும் இரத்த அழுத்தம் திடீரெனக் கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும். இது
இதயத்திற்கும் ஆபத்தானது.

சிறுநீரின் அளவு குறைதல் (Oliguria)

வடிகட்டிகள் முற்றிலும் அழற்சியால் அடைபட்டுக் கொள்ளும் போது, நாள் ஒன்றுக்கு வெளியேறும் சிறுநீரின் அளவு வழக்கத்தை விடக் கணிசமாகக்
குறைந்துவிடும்.

பொதுவான சோர்வு மற்றும் பசியின்மை

யுரியா, கிரியேட்டினின் போன்ற நச்சுக்கள் இரத்தத்தில் தேங்குவதால், எப்போதும் ஒருவித மந்தநிலை, வாந்தி உணர்வு, பசியின்மை, அனீமியா (இரத்தச்சோகை) மற்றும் உடல் அரிப்பு போன்ற உபாதைகள் தலைதூக்கும்.

ஆபத்தின் பின்னணி: வடிகட்டி வீக்கத்திற்கான காரணங்கள் என்ன?

நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune System) நம் உடலக் காக்கும் ஒரு இராணுவம் போன்றது. ஆனால், சில நேரங்களில் இந்த இராணுவமே குழப்பமடைந்து நம் சொந்த உறுப்புகளையே தாக்கத் தொடங்கிவிடும் (Autoimmune disorders). வடிகட்டி வீக்கத்திற்குப் பின்னால் இருக்கும் முதன்மைக் காரணி இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் குளறுபடிகள் தான்.

இந்நோய் ஏற்படுவதற்கான சில முக்கியக் காரணங்கள்

1. தொற்றுகளுக்குப் பிந்தைய பாதிப்பு (Post-infectious)

இது குறிப்பாகக் குழந்தைகளிடம் அதிகம் காணப்படும். தொண்டையில் ஏற்படும் ‘ஸ்ட்ரெப்டோகாக்கஸ்’ (Streptococcal infection) என்ற பாக்டீரியா தொற்று அல்லது தோலில் ஏற்படும் சீழ்க்கட்டிகள் (Impetigo) குணமடைந்த 1-2 வாரங்களுக்குப் பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்கிய ‘எதிர்பொருட்கள்’ (Antibodies) போய் இந்தச் சிறுநீரக வடிகட்டிகளில் மாட்டிக் கொள்ளும். இதனால் அங்கு அழற்சி (Inflammation) ஏற்பட்டு வடிகட்டி வீக்கம் உண்டாகிறது.

2. சுய நோய் எதிர்ப்புத் தாக்குதல் நோய்கள் (Autoimmune Diseases)

லூபஸ் (SLE – Systemic Lupus Erythematosus): இந்நோயில் உடலின் எதிர்ப்பு மண்டலம் தோல், மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களைத் தாக்கும். இதனால் ஏற்படும் வடிகட்டி வீக்கம் மிகவும் ஆபத்தானது.

IgA நெஃப்ரோபதி (IgA Nephropathy): ‘இம்யூனோகுளோபுலின் ஏ’ என்ற புரதம் சிறுநீரக வடிகட்டிகளில் அளவுக்கு அதிகமாகப் படிந்து, காலப்போக்கில் அழற்சியை ஏற்படுத்தும்.

3. இரத்தக் குழாய் அழற்சிகள் (Vasculitis)

உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கங்கள் (எ.கா: Granulomatosis with Polyangiitis) சிறுநீரக வடிகட்டிகளையும் பாதிக்கும்.

4. இதர காரணங்கள்

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் (Diabetes), நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், எய்ட்ஸ் (HIV) அல்லது ஹெபடைடிஸ் பி, சி போன்ற வைரஸ் தொற்றுகள், மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை (Painkillers/NSAIDS) மருத்துவரின் ஆலோசனையின்றித் தொடர்ச்சியாகத் தவறான முறையில் பயன்படுத்துவது ஆகியவையும் வடிகட்டிகளைப் பாழாக்கும்.

( தொடரும்)

தொகுப்பு: பொதுநல மருத்துவர்சுதர்சன் சக்திவேல்

Tags :
× RELATED மயக்கமா…கலக்கமா?