பாரீஸ்: இந்தியா – பிரான்ஸ் இடையிலான நீண்டகால வியூக உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு மூன்று கட்டங்களாக 6 நாட்கள் ்அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் நீஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த ‘பாரத் இன்னோவேட்ஸ்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பாரீஸ் நகருக்குச் சென்ற அவர், ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடான ‘விவாடெக் 2026’ம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதுடன், பிரான்சின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்களையும் சந்தித்துப் பேசினார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புவதற்கு முன்பாக, பாரீஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தி மொழியில் சிறப்பு வழியனுப்பு வீடியோவைப் பகிர்ந்து பிரதமரை நெகிழ வைத்தார்.
அதில், ‘எனது அன்பு நண்பர் மோடி அவர்களே, இந்தியா – பிரான்ஸ் நட்பு அமரத்துவமானது; பிரான்ஸ் உங்களை நேசிக்கிறது’ என்று கூறினார். மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் இந்தியா வரவுள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், ‘இந்தியா – பிரான்ஸ் இடையிலான நட்பு வரும் காலங்களில் மேலும் வலுவடையும்; அதிபர் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்களின் அன்பிற்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன்’ என்றார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார். அவரது பயணம் வெற்றிகரமாக முடிந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
