ஊராட்சி எழுத்தரை திட்டிய தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது

மன்னார்குடி, மார்ச் 8: மன்னார்குடி அடுத்த தலையாமங்கலம் காவல் சரக த்திற்கு உட்பட்ட ஏத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோகிலா (35). ஊராட்சி எழுத்தர். இக்கிராமத்தில் உள்ள பாரதியார் தெரு பகுதியில் கடந்த 5ம் தேதி இரவு மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பன்னீர்செல்வம் (40) தனது நண்பர்கள் பார்த்திபன் (30), சுதாகன் (25), எலக்ட்ரிஷன் மலையரசன் (20) ஆகியோருடன் பைக்கில் சென்று பழுதான மின் இணைப்பை சீரமைத்து விட்டு திரும்பும் வழியில் ஊராட்சி எழுத்தர் கோகிலா வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. வெளியே வந்த கோகிலாவிடம் தடைபட்ட மின் விநியோகத்தை சீரமைக்க போன் செய்தால் போனை ஏன் எடுக்கவில்லை என கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலையாமங்கலம் போலீசில் கோகிலா அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏத்தக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பன்னீர் செல்வம் (40) மற்றும் அவரது நண்பர் பார்த்திபன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், இருவரும் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: