தேர்தல் விதி மீறிய 5 பேர் மீது வழக்கு

மன்னார்குடி, மார்ச் 8: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி உத்தரவின் பேரில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த தென்வடல் காகித பட்டறை தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்தீபன் (61), கூட்டுறவு பால் வழங்கும் சங்க அலுவலகம் முன் பிளக்ஸ் வைத்திருந்த சேரன்குளம் அதிமுக பிரமுகர் சுப்பிரமணியன் (58), சிங்கன்குளம் பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த திமுக பிரமுகர் இளங்கோவன் (66) ஆகிய 3 நபர்கள் மீது டவுன் எஸ்ஐ முருகன் வழக்கு பதிவு செய்தார்.

அதுபோல், திருமக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட மகாராஜபுரம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி கட்சி கொடியேற்றிய நாம்தமிழர் கட்சி நிர்வாகி முகமது இஸ்மாயில் (22) மீது எஸ்ஐ பிரபு வழக்கு பதிவு செய்தார். அதேபோல் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல தெருவில் உரிய அனுமதியின்றி சுவரெழுத்து எழுதிய அமமுக நிர்வாகி பூங்கோதை (55) என்பவர் மீது இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்தார். மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி இதுவரை 21 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>