சோதனை சாவடியில் போலீசாரிடம் குடிபோதையில் தகராறு செய்த 3 பேர் கைது

முத்துப்பேட்டை, மார்ச் 8: முத்துப்பேட்டை அருகே சோதனை சாவடியில் போலீசாரிடம் குடிபோதையில் தகராறு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தேர்தலை முன்னிட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை கடந்து சென்ற காரை மறித்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது காரில் இருந்தவர்கள் கடும் குடிபோதையில் இருந்த நிலையில் “எப்படி எங்க காரை நிறுத்தலாம்?” என்று அங்கிருந்த பேரிகாட்டை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. அப்போது விசாரித்த காவலர் முரளிதரனிடம் தகராறில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் முரளிதரன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன், போலீசார் முரளிதரனிடம் தகராறு செய்த தில்லைவிளாகத்தை சேர்ந்த நடராஜன் மகன் ஜவகர் (33), வைரக்கண்ணு மகன் மணிவண்ணன்(31), ராஜேந்திரன் மகன் மணிக்கண்டன்(33) ஆகிய மூவரை கைது செய்ததுடன் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>