தஞ்சை மாநகர சாலையில் மெகா பள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சை, மார்ச் 8: தஞ்சை மாநகர சாலைகளின் மரண பள்ளங்களால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் நகரில் மைய பகுதியான பழைய பேருந்து நிலையம், தெற்கலங்கம், மேலவீதி, கீழவீதி, கரந்தை, வடக்குவாசல், பள்ளிஅக்ரகாரம், கீழவாசல், சீனிவாசபுரம், நாஞ்சிக்கோட்டை சாலை போன்ற பகுதிகளில் சாலைகள் படுகேவலமான முறையில் உள்ளது. குறிப்பாக நகரின் உள்பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் வெறும் மண்ணை போட்டு மூடி சென்று விடுகின்றனர். அதில் தார் சாலை போடாததால் சில நாட்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மக்கள் அவ்வழியே செல்ல முடியாத அளவிற்கு சிரமங்களை சந்திக்கின்றனர்.

மேலும் நாட்கள் செல்ல அச்சாலை கரடுமுரடுகளாகி நடந்து செல்ல கூட லாயக்கற்றதாக உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் நகரில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை மூடப்பட்டுள்ள மூடி உடைந்து அல்லது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. தஞ்சை கரந்தை மார்க்கெட் பகுதி, பழைய திருவையாறு சாலை, பள்ளிஅக்ரகாரம் பெரிய தெரு, சின்னதெரு, பழைய கும்பகோணம் ரோடு, தஞ்சை சீனிவாசபுரம் கிரி ரோடு, யாகப்பா நகர், பூச்சந்தை சாலை, வண்டிக்காரத் தெரு என நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகள் மரண பள்ளங்களாக காட்சி அளிக்கிறது.

தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாறி வருகிறது என மாநகராட்சி நிர்வாகம் மார்தட்டி வரும் இவ்வேளையில் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலைகள் படுமோசமாக உள்ளது தஞ்சை மாநகர மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தஞ்சை பெரிய கோயில் தேர் திருவிழா வர உள்ள நிலையில் தஞ்சை 4 ராஜவீதிகளும் கரடுமுரடாக காட்சி அளித்து வருகிறது. தேர் திருவிழாவிற்குள் இச்சாலைகளையாவது செப்பனிட வேண்டும். மேலும் நகரின் அனைத்து வார்டுகளிலும் மோசமாக உள்ள சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து உடனடியாக சாலைகளை செப்பனிட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: