லிவ்-இன் உறவில் வாழ்ந்த காதல் ஜோடி; பெங்களூருவில் மூச்சு திணறடித்து இளம்பெண் கொலை; வாலிபர் கைது

 

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரை சேர்ந்தவர் அனுஷா (20). இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஷரத் (27) என்பவர் அறிமுகமானார். இவர், தண்ணீர் டேங்கர் டிரைவர். சாதாரண நட்பாக தொடங்கிய இவர்களது உரையாடல், நாளடைவில் தீவிர காதலாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ தொடங்கினர். கடந்த 6 மாதங்களாக திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் ஜாலியாக வாழ்ந்து வந்தனர்.

நாட்கள் செல்ல செல்ல, தனிப்பட்ட காரணங்கள், குடும்ப பிரச்னைகள் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி இரவு தகராறு வலுத்தது. அதற்கு பிறகு இருவருமே ஒன்றாக மது அருந்தினார்களாம். போதை தலைக்கு ஏறியது. மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த ஷரத், அனுஷாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே அனுஷா துடிதுடித்து இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த மரணம் நடந்துள்ளது. போதை தெளிந்ததுமே அனுஷாவின் சடலத்தை கண்டு ஷரத் பதற்றமடைந்தார்.

பிறகு, சட்டப்பூர்வமாக இதிலிருந்து தப்பிக்க நினைத்து, ஒரு வக்கீலை சந்தித்து நடந்த உண்மைகளை கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ, சேஷாத்ரிபுரம் காவல் துறையினருக்கு தெரிவித்து விட்டார். சிறிது நேரத்தில் போலீசார் வந்து அனுஷாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு தலைமறைவான ஷரத் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: