கரூர் சட்டமன்ற தொகுதிக்கு 426 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

கரூர், மார்ச் 8: கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பபட வேண்டும் என்ற தீர்மானிக்கும் கனிணி முறையிலான குலுக்கலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் நாரத கான சபா அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான மண்டபத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்கள் கணினி முறை குலுக்கலின் அடிப்படையில் பிரிக்கும் பணிகள் துவக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைத்திட வேண்டும் என உத்தரவின்படி, துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தற்போது 1274 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் தணிக்கை இயந்திரங்கள் கனிணி முறை குலுக்கல் செய்யப்பட்டு அதனடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவைப்படுகிற எண்ணிக்கையை விட 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களும், 29 சதவீத வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் இந்த கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

அந்த வகையில் நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் கனிணி முறை குலுக்கலின்படி அரவக்குறிச்சிக்கு 372 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 373 கட்டுப்பாட்டு கருவிகளும், 400 தணிக்கை இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதிக்கு 426 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 426 கட்டுப்பாட்டு கருவிகளும், 458 தணிக்கை இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்கு 357 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 357 கட்டுப்பாட்டு கருவிகளும், 384 தணிக்கை இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குளித்தலை தொகுதிக்கு 375 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 375 கட்டுப்பாட்டு கருவிகளும், 403 தணிக்கை இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்வின் போது, கோட்டாட்சியர்கள் பாலசுப்ரமணியன், ஷேக்அப்துல் ரக்மான் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: