×

தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல; வெளுத்து போன அறிக்கை: டிடிவி தினகரன் காட்டம்

சென்னை: டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் நிதிநிலை குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது, இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மந்தமடைந்திருப்பது போன்ற தமிழக மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்துள்ள உண்மைகளுக்கு புதிய அட்டை போட்டு மீண்டும் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது.

தமிழகத்தின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரிசெய்யப் போகிறார்கள், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன, வருவாயை பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது. மாநிலத்தின் நிதிநிலையை சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன, வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான செயல் திட்டங்கள் என்ன, மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்க என்ன புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன இப்படி செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் நிதியமைச்சர் அளித்த ஒரே பதில் ‘இதை சரிசெய்ய சிறிது காலம் தேவைப்படும்,’ என்பது தான்.

வருவாயைப் பெருக்குவதற்கான புதிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், அரசு துறைகளில் உள்ள தவறுகளை தடுக்க வேண்டும் என்பதையே பிரதான தீர்வாக முன்வைத்திருப்பது, நிதிச்சுமைக்கான தீர்வுகளையும், செயல் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். ஆனால், தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெளிவான தொலைநோக்கு பார்வையும் இல்லை; நம்பிக்கையூட்டும் செயல்திட்டங்களும் இல்லை; காலவரையறையுடன் கூடிய உறுதிமொழிகளும் இல்லை. எனவே, தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல; ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன அறிக்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Government of Dweka ,DTV Dinakaran ,Katam ,Chennai ,Tamil Nadu ,Finance Minister ,Government of Tamil Nadu ,
× RELATED சொன்னதை நிரூபித்தால் அரசியலை விட்டு...