சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உள்ளதையடுத்து வழக்கறிஞர் ரியாஸ் அகமது என்பவர் அமைச்சர் குமாரை சந்தித்து ரூ.1,28,934 காசோலையை வழங்கினார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமாரை சந்தித்த வழக்கறிஞர் ரியாஸ் அகமது என்பவர், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீதுள்ள கடன் தொகையாக கூறப்படும் ரூ.1,28,934க்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ரியாஸ் அகமது கூறியதாவது:
தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1,28,934 கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடனை அடைப்பதற்கான எனது பங்காகவே இந்தக் காசோலையை வழங்கியுள்ளேன். மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து பொதுமக்களுக்கு முழுமையான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.
மேலும், மாநிலத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அரசு வெளிப்படையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டியது அவசியமும், எதிர்க்கால தலைமுறைகள் மீது கூடுதல் பொருளாதார சுமை ஏற்படாத வகையில் நிதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
