செங்கத்தில் ஏரிக்கால்வாய்களை தூர்வார கோரிக்கை குப்பநத்தம் அணை திறந்தும் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள் (தி.மலை) பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

செங்கம், மார்ச் 8: செங்கம் அருகே ஏரிக்கால்வாய்களை தூர்வார வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த 24ம் தேதி முதல் 20 நாட்களுக்கு செய்யாற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரம்பி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏரிக்கால்வாய்களை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தாததால் குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டும் அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லாமல் வறண்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் அலட்சியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஏரி பாசன சங்க நிர்வாகிகள் நேற்று பொதுப்பணித்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பணியிட மாறுதல் பெற்று சென்றுள்ளதால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உரிய பதிலளிக்க அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு திருவண்ணாமலையில் கலெக்டரிடம் முறையிடலாம் என்று விவசாயிகள் புறப்பட்டு சென்றனர். ஆனால், தேர்தல் பணி காரணமாக கலெக்டரையும் சந்திக்க முடியவில்லை என தெரிகிறது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக குப்பநத்தம் அணையில் இருந்து திறந்துவிட்ட தண்ணீர் மக்களுக்கு எந்த தடையுமின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: