திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ₹13.83 லட்சம் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பறிமுதல்

திருவண்ணாமலை, மார்ச் 8: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினர் மூலம் இதுவரை ₹13.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 மணி நேர சுழற்சி முறையில், இந்த குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் நடந்த வாகன சோதனையில், ₹50 ஆயிரத்துக்கும் அதிகமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ₹13.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் ₹1,96,200, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ₹1,59,330, ஆரணி தொகுதியில் ₹3,29,500, செய்யாறு தொகுதியில் ₹90 ஆயிரம், வந்தவாசி தொகுதியில் ₹6,08,260 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ₹10,540 மதிப்பிலான வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை முழுவதும், சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், திருவண்ணாமலை மற்றும் வந்தவாசியில் உரிய ஆவணங்களை ஒப்படைத்தவர்களிடம் ₹3,76,450 திரும்ப வழங்கப்பட்டுள்ளது. செங்கம், கலசபாக்கம், போளூர் ஆகிய தொகுதிகளில் இதுவரை பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

Related Stories: